முஸ்லிம்கள் மீதான தாக்குல், ஒரு இன அழிப்புக்கு வழிவகுக்கும் - சிவாஜிலிங்கம்
இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 94ம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலாக சபா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த பிரேரணையை சபைக்கு கொண்டுவந்து கருத்து தெரிவிக்கையில்,
எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றும் அதிகாலையில் நுகேகொட பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய வர்த்தக நிலையம் தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கள இனத்தை சேர்ந்த சிலர் இவ்வாறான தாக்குதல்களை நடத்துகிறார்கள். எனவே அரசாங்கம் இவ்வாறான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டு பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஒரு இன அழிப்புக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது என கூறினார்.
இந்த பிரேரணையை வவுனியா மாவட்ட சிங்கள மாகணசபை உறுப்பினர் ஜயத்திலக்கவும் ஆமோதித்தார். இதனையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Post a Comment