இரட்டைக் குடியுரிமை கொண்ட, சிறிலங்கா தூதுவர்கள் மாட்டினர்
வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற சிறிலங்காவின் மூன்று தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளது.
பங்களாதேஸ், பிரான்ஸ், மற்றும் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிறிலங்கா தூதுவர்களே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பங்களாதேசுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றி வரும் வை.கே.குணசேகர, பிரித்தானியா மற்றும் சிறிலங்கா குடியுரிமை கொண்டவர்.
பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றும் திலக் ரணவிராஜா அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ளவர்.
லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கொன்சூல் ஜெனரலாகப் பணியாற்றும், சுவர்ணா குணரத்ன கனேடிய குடியுரிமையையும் கொண்டவர் என்று தெரிய வந்துள்ளது.
இவர்களில், வை.கே.குணசேகர மாத்திரமே, சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையில் உள்ளவராவார்.
அதேவேளை, பிரான்சுக்கான புதிய தூதுவராக பிரேரிக்கப்பட்டுள்ள, புத்தி அதாவுடவும் அமெரிக்க குடியுரிமை கொண்டுள்ளவராவார்.
அதேவேளை, இராஜதந்திரப் பதவிகளில் ஏனைய தரங்களில் உள்ள அதிகாரிகளிலும் பலர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
நியூயோர்க்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் மின்ஸ்டர் கவுன்சிலராக உள்ள சோனாலி சமரசிங்க அமெரிக்க குடியுரிமை கொண்டுள்ளவராவார்.
பிரித்தானிய குடியுரிமை கொண்ட மனோஜ் வர்ணபால லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில், கவுன்சிலராக பணியாற்றுகிறார்.
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில், மூன்றாவது செயலராகப் பணியாற்றும், எஸ்.என்.குரே, பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டுள்ளவராவார்.
அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்றவரான பாலசூரிய, ஜோர்தானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் இரண்டாவது செயலராக பணியாற்றுகிறார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Post a Comment