ரணிலுக்கு மருத்துவ சோதனைகள் முடிந்தன, ட்ரம்ப் அரசின் செல்வாக்கு மிக்கவர்களைச் சந்திக்கிறார்
தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டுள்ள நிலையில், அடுத்தவாரம் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 28ஆம் நாள் தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.
நியூயோர்க்கில் உள்ள பிரெஸ்பைரேரியன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை முழுமையான பரசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டு இரவுகள், மூன்று பகல்கள் மருத்துவமனையில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார். அவரது உறக்க நிலையும், உணவுப் பழக்க வழக்கமும் கண்காணிக்கப்பட்டது.
இந்த மருத்துவ பரிசோதனைகளில் முடிவடைந்துள்ள நிலையில் நியூயோர்க்கில் தங்கியுள்ள சிறிலங்கா பிரதமர், ஐ.நா சமுத்திரங்கள் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
அத்துடன் ட்ரம்ப் அரசாங்கத்தின் செல்வாக்கு மிக்க பிரமுகர்களையும் அவர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
Post a Comment