Header Ads



கவிக்கோ மறைவு - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடிய போரம் இரங்கல்

பேராசிரியராக, அறிஞராக, இலக்கிய உலகின் பேரரசனாக, புதுக் கவிதை உலகின் பிதாமகனாக… திகழந்தவர் கவிக்கோ அப்துர் ரஹ்மானின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

உருது கவிஞர்களின் பரம்பரையில் உதித்த கவிக்கோ உருது உள்ளிட்ட பல மொழி கவிதைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். தமிழ், ஆங்கிலம், உருது, பாரசீகம், ஹிந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த அவர், காலத்தால் அழியாத அரிய பொக்கிஷங்களை விட்டுச் சென்றிருக்கிறார்.

சாகித்திய அகடமி உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான கவிக்கோவின் கவிதைகள் பல இலட்சக்கணக்கானோரை கவர்ந்தன. அறிவியல், ஆன்மிகம், வரலாறு, தத்துவம்… என்று அவரது இலக்கியப் பணி விரிந்தது. 

இஸ்லாமிய இலக்கிய கழகத்தை உருவாக்கி அதன் மூலம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளை இந்தியாவிலும் பிற நாடுகளில் நடத்தி சாதனை படைத்தவர். கவி அரங்குகளை அதிர வைத்தவர். இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள், இலக்கிய ஒன்றுகூடல்களில் பங்கேற்று இலங்கையுடன் ஓர் அத்தியந்த உறவைப் பேணி வந்தவர்.

அவர் இன, மத பேதங்களுக்கு அப்பால் அனைவராலும் மதிக்கப்பட்ட மனிதநேயமிக்க ஓர் ஆளுமை. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக குரல் கொடுத்து வந்த அவர், சமூக ஐக்கியத்திற்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் தனது பேனாவினால் போராடியவர்.

இத்தகைய பெருந்தகையான கவிக்கோ அப்துர் ரஹ்மான் தழிழ் கூறும் நல்லுலகிலிருந்து விடை பெற்று விட்டார். அவரது  இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவன பாக்கியம் பெற பிரார்த்திக்கின்றோம்.

என்.எம். அமீன்
தலைவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடிய போரம்

No comments

Powered by Blogger.