ஞானசாரவின் வழக்குகளை போல, ஏனைய வழக்குகளையும் விரைவாக முடிக்கலாமே..?
கலகொட அத்தே ஞானசார தேரரை, இரண்டு நீதிமன்றங்களாலும் ஒரேநாளில் விசாரணை நடத்தி பிணையில் விடுவிக்க முடியுமாயின், நகுலன் என்றழைக்கப்படும் சுப்ரமணியம் நகுலராசாவையும் விடுவிக்கலாம் என்று அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன, தெரிவித்தார்.
புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட தொப்பியை இலண்டனுக்குக் கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, 15 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நகுலன் என்றழைக்கப்படும் சுப்ரமணியம் நகுலராசாவை விடுவிக்குமாறு, சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன, அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில், நேற்று (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கலகொட அத்தே ஞானசார தேரர், இரண்டு நீதிமன்றங்களாலும் பிணையில் விடுவிக்கப்பட்ட தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுப்ரமணியம் நகுலராசாவுக்கு எதிராக, பாரதுரமான குற்றசாட்டுகள் காணப்பட்ட போதும், பிணைக்கு ஆட்சேபணை இல்லை எனவும் விசாரணைகள் அனைத்தும் முற்றுப்பெற்றுள்ளன எனவும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்ததாகவும் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன கூறினார்.
ஞானசாரவுக்கு எதிரான வழக்குகளை போல, ஏனைய வழக்குகளையும் விரைவாக முடிக்கலாமே என நீதவான் வினவியபோது, அதற்குத் தாம் முயல்வதாக ஒருங்கிணைக்கப்பட்ட குற்றத்ததடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார் என்றும் தெரிவித்தார்.
நகுலனை விடுவிக்குமாறு, எந்த தமிழ்க் கட்சியுமோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ சுமந்திரன் எம்.பியோ கோரவில்லை என்று குறிப்பிட்ட அவர், எல்.ரீ.ரீ.ஈயுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்படுமாறு கோருவோரின் பட்டியலில் சுப்ரமணியம் நகுலராசா இல்லை என்றும் சட்டத்தரணி இதன்போது கூறினார்.
புலிகள் தொடர்பான பல தகவல்களை அரச புலனாய்வு சேவையில் இருந்துகொண்டு. நகுலன் வழங்கியதாகவும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள விரைவு அஞ்சல் (கொரியர்) நிறுவனத்தினூடாக, புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை மிகவும் சூட்சுமமான முறையில் பொதியொன்றுக்குள் மறைத்து வைத்து, அதனை இலண்டனுக்கு அனுப்பமுயன்றமை தொடர்பில், ஜேசுரத்னம் ஜெகசம்சன், மகாதேவா பிரசன்னா, சுப்பிரமணியம் நகுலராசா கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மிகச்சரியான எடுகோள்! கடந்த கால தீர்ப்புக்கள் தற்கால வழக்குகளில் செல்வாக்குச் செலுத்தும் என்பதையும் இதனடிப்படையில் பிணை வழங்கப்படுவதை அவசியப்படுத்தியும் உள்ளது எனலாம்.
ReplyDelete