ஞானசாரர் தொடர்பாக, அரசாங்கத்திலும் முரண்பாடு - முஜிபுர் ரஹ்மான்
-தமிழில்:எம்.ஐ.அப்துல் நஸார் + விடிவெள்ளி-
பௌத்த அமைப்பான பொதுபல சேனா வெளிநாட்டு சக்திகளால் வழிநடாத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீவிரவாத அமைப்பு வெறுப்புணர்வு, குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு நிதியுதவியளிப்பதும் தூண்டுகோலாக இருப்பதும் யாரென கண்டறிவதற்கு இலங்கையின் புலனாய்வுத்துறை விசாரணை செய்ய வேண்டும் எனவும் சிலோன் டுடேக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். சிங்கள சமூகத்தின் ஒரு வீதத்திற்கும் குறைவானவர்களையே இவ்வியக்கம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கே: தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது தொடர்பில் நீங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறீர்கள். இப்போது நாம் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கும் இப்பிரச்சினை புதிதானதொன்றல்ல. தற்போதைய சூழ்நிலை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
கடந்த சில வருடங்களாக உச்ச அளவிலான தீவிரவாத செயற்பாடுகளைப் பார்க்கிறோம். எனவே, இதனைச் சகித்துக்கொள்ள முடியாது எனவும் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் காரணமாக தீவிர செயற்பாடுகள் ஓரளவு குறைவடைந்துள்ளன. எனினும் சில பகுதிகளில் பயங்கர மற்றும் வன்முறையான தனித்தனி சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அதன் பின்னணியில் மெஸாட் இருக்கிறதா என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும். எமக்கு இந்த விடயத்தில் சந்தேகம் இருக்கிறது. திடீரென ஆரம்பித்த தீவிரவாதம் திடீரென தணிந்தது. அது மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது சந்தேகத்திற்கிடமான செயற்பாடாகும். எனவே, இக் குழு வேறொரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்படுகின்றது என்பது அந்த நிகழ்வின் மூலம் தெளிவாகத் தெரியவருகின்றது.
கே: சிரேஷ்ட அமைச்சர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பான இடத்தில் ஞானசார தேரர் மறைந்திருப்பதாக கூறப்படுகிறதே அது உண்மையா?
இது தொடர்பில் நானும் கேள்விப்பட்டேன். எனினும், ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்த அரசாங்கத்திலுள்ள எந்த அமைச்சருக்கும் காரணம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவ்வாறு யாரேனும் உதவியதாகக் கண்டறியப்பட்டால் அவர் தனது அந்தஸ்தை இழப்பார். தேவையில்லாமல் எந்த ஒரு அமைச்சரும் தனது அந்தஸ்தை இழக்க விரும்புவாரா? ஞானசார தேரருடன் தொடர்பினை பேணியவர்களது வாக்கு வங்கி அதிகரிக்கவில்லை. உண்மை என்னவென்றால் ஞானசார தேரருடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் தமது வாக்குகளை இழப்பார்கள்.
கே: எவ்வாறெனினும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தினுள் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன அப்படியா ?
ஆம், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும். எவ்வாறாயினும், எவரும் பாஸிச மற்றும் தீவிரவாத கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை. ஞானசார தேரர் முஸ்லிம்களை வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார். தற்போதைய அரசாங்கத்தின் எந்த ஒரு அங்கத்தவரும் அவ்வாறான கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுள் எவரும் தீவிரவாதம் மற்றும் பாஸிசத்தை வெளிப்படுத்தும் அளவிற்குச் செல்லவில்லை.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, சட்டத்திலிருந்து ஞானசார தேரரை காப்பாற்றுவதன் மூலம் எவரும் நன்மையடைந்துவிட முடியாது. அவர்கள் தற்போது அனுபவித்துவரும் நலன்களை இழப்பார்கள். ஞானசார தேரரை அருகில் வைத்துக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக் ஷ மற்றும் கோட்டாபய ஆகியோருக்கும் இதுதான் நடந்தது. அவர்களிடம் இருந்ததை இழந்தார்கள்.
Post a Comment