அரச சொத்துக்கு சேதம் விளைவித்தால், இனி அரச தொழில் கிடையாது - வருகிறது சட்டம்
அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களை, அரச தொழில்களுக்காக இணைத்துக் கொள்வதை நிராகரிப்பதற்கான கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அறிய முடிகிறது.
பல்வேறு வகையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கலகங்கள் உள்ளிட்ட குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள், பல சந்தர்ப்பங்களில் அரச சொத்துகளுக்குக் கடுமையான சேதத்தை விளைவித்தமையைக் கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.
இதனால், அரசுக்குச் சொந்தமான பெறுமதிமிக்க அரச சொத்துகள் சேதமடைந்துள்ளன. இவை தொடர்பில் கவனம் செலுத்தியதன் பின்னரே, மேற்குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு ஆலோசித்து வருவதாக, அரச உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
அரச சொத்துகளை பொறுப்புடன் முறையாக பயன்படுத்த முடியாத நபர்கள், அரச தொழில்களுக்கு தகுதியானவர்கள் அல்லர் என்றடிப்படையிலேயே மேற்கண்டவாறு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
அதனடிப்படையில், அரச முன்னுரிமை சேவைகளான, நிர்வாக சேவை, கணக்காளர்கள் சேவை, முகாமைத்துவ சேவை மற்றும் வைத்திய சேவை ஆகிய சேவைகளுக்கே, மேற்படி நபர்களை இணைந்துகொள்ளாமல் விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக அறியமுடிகிறது.
இற்றைக்குப் பல வருடங்களுக்கு முன்னர், அரச சேவையில் ஒருவரை இணைத்துகொள்ளும் போது, அவர் தொடர்பிலான பொலிஸ் அறிக்கை மற்றும் அந்த நபரின் கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பில் நன்றாக ஆராயப்பட்டது. அத்துடன், பொலிஸ் அறிக்கையின் பிரகாரமே செயற்படுத்தப்பட்டது.
கடந்த காலங்களில், இந்த செயற்பாடுகளில் தடங்கல்கள் ஏற்பட்டிருந்தன. எனினும், பொலிஸ் அறிக்கையின் பிரகாரம், அரச சேவைக்கு ஆட்களைச் சேர்த்துகொள்ளும் போது, பொலிஸ் அறிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் கவனஞ்செலுத்தும் வகையில், நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அறியமுடிகிறது.
Post a Comment