விக்னேஸ்வரன் ஐயாவுக்கு..!
சபையின் பெண் உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு பெண்கள் விவகார அமைச்சு வழங்கப்பட இருப்பதாகவும், விவசாய அமைச்சை நீங்களே வைத்திருக்கப் போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
பெண் அரசியல்வாதிகள் பெண்கள் விவகாரத்தை கவனிக்கும் தகுதியை மட்டும்தான் கொண்டிருக்கிறார்களா என்ன? அல்லது நமது பெண்கள் வயல்களில் களை பிடுங்க மட்டும்தான் தகுதியுடையவர்கள், விவசாய அமைச்சு நிர்வாகத்தை திறம்பட செய்யமாட்டார்கள் என்று தீர்மானிக்கிறீர்களா?
அனந்தியின் திறமையில் நம்பிக்கை வைத்து, சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி பேச வைக்க முடியும் என்றால் அவரை பெண்கள் விவகாரத்துடன் சேர்த்து விவசாய அமைச்சராகவும் நியமிக்க முடியாதது ஏன்?
நீக்கப்பட்ட அமைச்சுக்களைப் பிரித்து இன்னும் சிலருக்கு வழங்கவேண்டி இருக்கிறது என்று நியாயம் கற்பிக்கவும் முடியாதே! மாகாண சபைகளில் முதலமைச்சரையும் உள்ளடக்கி ஐந்து அமைச்சர்களுக்கு அதிகமாக சட்டப்படி நியமிக்க முடியாதல்லவா?
பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் எவராவது ஒரு பெண்ணைப் பிடித்து மகளிர் விவகார அமைச்சராக்கி பாரிய நிதி ஒதுக்கீடுகளைச் செய்யாமலும், பெண்களின் விவகாரங்களில் முற்போக்கான சட்ட விதிகளைக் கொணர்வதற்கு அனுமதிக்காமலும் நாட்டின் சனத் தொகையில் அரைவாசிக்கும் மேல் இருக்கும் பெண்களுக்கு நீதி செய்தாகிவிட்டது எனப் படம் காட்டப்படுவது போல ஒரு பெருந்தேசிய பிற்போக்குத் தனமானம் உண்டா? இவ்வாறே, அனந்திக்கு விவசாய அமைச்சையும் சேர்த்து வழங்காமல், அதை முதலமைச்சரே வைத்திருப்பதும் ஒரு தமிழ்த் தேசிய பிற்போக்குத் தனமானமல்லவா?
அனந்தி, உங்களுக்கு அடுத்ததாக அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவராகும். இவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்கு முன்னர் தீர்மானித்து அறிவித்திருந்தால் வேட்பாளர்கள் அனைவரிலும் அதிகூடிய விருப்பு வாக்குகளை அனந்தியே பெற்றிருப்பார் அல்லவா?
பல விமர்சனங்களுக்கும் அப்பால், அனந்தி போரினால் பாதிக்கப்பட்ட இலட்சக் கணக்கான தமிழ் பெண்களின் ஒரேயொரு வடமாகாண சபை பெண் உறுப்பினராகும்.. என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லையா?
Basheer Segu Dawood
Post a Comment