இரத்தம் ஓட்டும் கொள்கை முரண்பாடுகள்...!
(இன்றைய 30.06.2017 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத செயற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் முஸ்லிம்கள் தமக்குள்ளேயே அரசியல், மார்க்க கொள்கை முரண்பாடுகளால் முட்டி மோதிக் கொள்வது கவலைக்குரியதாகும்.
கடந்த நோன்புப் பெருநாள் தினத்தன்று வவுனியா, சூடுவெந்தபுலவு கிராமத்தில் பெருநாள் திடல் தொழுகையின் போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.
புத்தாடை அணிந்து, புதுமணம் பூசி தொழுகைக்கு தயாராகவிருந்த தொழுகையாளிகள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியமையும் அப்பாவி வயோதிபர் ஒருவரது தலையை உடைத்து இரத்தவெள்ளத்தில் ஆழ்த்தியமையும் எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
பள்ளிவாசலில் தொழுகை நடாத்துதல், திடலில் தொழுகை நடாத்துதல் எனும் இரு கொள்கை நிலைப்பாடு கொண்டவர்களுக்கிடையிலான கருத்து மோதலின் வெளிப்பாடே குறித்த சம்பவமாகும். இந்த கருத்து மோதல் இலங்கையில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலும் காலாகாலமாக நீடிக்கும் ஒன்றேயாகும்.
இலங்கையின் பல பகுதிகளிலும் ஒரே ஊருக்குள் பள்ளிவாசல்களிலும் கடற்கரை, மைதானம், வயல் வெளி போன்ற பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் நடந்தே வருகின்றன. கடந்த காலங்களில் சில பகுதிகளில் இது விடயமாக முரண்பாடுகள் தோற்றம்பெற்று வன்முறையில் முடிந்ததும் உண்டு. அதே போன்றுதான் சூடுவெந்தபுலவு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
ஒருவர் தான் விரும்பிய இடத்தில் சட்டரீதியான முறையில் தொழுவதற்கான உரிமை உண்டு என்பதையும் அது இலங்கையின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனைத்தடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை. அவ்வாறு தடுப்பது அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும்.
அதுமாத்திரமன்றி, நாட்டில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களுக்கு எதிராக பௌத்த இனவாத சக்திகள் தாக்குதல் நடத்தி வருவதால் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர். அவ்வாறான சமயத்தில் நாமே நமது தொழுகைத் தலங்களில் இரத்தத்தை ஓட்டுவது எந்தவகையில் நியாயம்?
முஸ்லிம்கள் தீவிரவாதிகள், வன்முறையாளர்கள், மத்ரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்றெல்லாம் பௌத்த பேரினவாதிகள் கதை பரப்பிக்கொண்டிருக்கையில் அவற்றை உண்மைப்படுத்துவதாகவே இவ்வாறான சம்பவங்கள் அமைந்துள்ளன.
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சீர்குலைந்தமைக்கு அரசியல் கட்சிகளும் மார்க்க குழுக்களுமே காரணம் என்றால் மிகையாகாது.
தேர்தல் காலம் வந்துவிட்டால் எவ்வாறு அரசியல் கட்சிகள் மக்களை பிளவுபடுத்துகின்றனவோ அதேபோல் மார்க்க கொள்கை வேறுபாடு கொண்ட குழுக்களும் ரமழான் போன்ற பருவ காலங்களில் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தூண்டுகின்றன. இது முஸ்லிம் சமூகத்தைப் பீடித்துள்ள பெரும் சாபக்கேடாகும்.
இந்த முரண்பாடுகளை களைந்து வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதற்கான முயற்சிகளை சிலர் ஆங்காங்கே முன்னெடுத்தாலும் அது வெற்றியளிக்கவில்லை. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் இவ்வாறான மார்க்க கருத்து வேறுபாடுகள் கொண்ட குழுக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்ஸிலினால் கூட இந்த சவாலை வெற்றி கொள்ள முடியவில்லை.
எனவேதான் தொடர்ந்தும் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடுகின்ற குழுக்களை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் எதிர்க்க வேண்டும். அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறான வன்முறை விரும்பிகளை, கொள்கை வெறியர்களை சமூகத்திலிருந்து ஓரங்கட்ட வேண்டும். அப்போதுதான் நிம்மதியான, சந்தோசமான பெருநாளை எம்மால் கொண்டாட முடியுமாகவிருக்கும்.
Post a Comment