ஞானசாரரின் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட்டு சமாதானம் நிலவுகிறது, இல்லையேல் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கும்
-ARA.Fareel-
ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடாக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் டிலன்த விதானகே,
‘முன்பு ஹலால் சான்றிதழ்கள் வழங்குவதற்கு உலமாசபை கட்டணங்களை அறவிட்டு வந்தது. தற்போது ஹலால் சான்றிதழ் வழங்கி வரும் நிறுவனமும் உலமாசபை போன்ற கட்டணங்களை அறவிட்டு வருகின்றது.
சில கம்பனிகள் ஹலால் சான்றிதழுக்காக மில்லியன் கணக்கான ரூபாக்களை கட்டணமாக செலுத்தி வருகின்றன. இந்நாட்டில் வாழும் 10 சதவீதமான முஸ்லிம்களுக்காக 90 வீதமாக வாழும் பெரும்பான்மை உட்பட ஏனைய சமூகங்களும் ஹலால் வரிக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
எனவே, இந்த ஹலால் என்ற பெயரில் அறவிடப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது. வருடாந்தம் எவ்வளவு தொகை அறவிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் குழுவொன்றினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஹலால் நிதி அரசாங்கத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும்.
இதைவிடுத்து பௌத்த விஹாரைகளின் உண்டியல் நிதியினை அரசாங்கத்தின் கண்காணிப்புக்குக் கீழ் கொண்டு வருவதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முயற்சிகள் மேற்கொள்வது கண்டிக்கத்தக்கதாகும். அஸ்கிரிய பீட நிர்வாகியான பௌத்த பிக்கு ஒருவரின் தலைமைத்துவத்தின் கிழ் இயங்கிவரும் தம்புள்ளை ரங்கிரி ரஜமகாவிகாரைக்கு கிடைக்கும் நிதியினை மாத்திரம் முகாமைத்துவம் செய்ய முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
புதிய பள்ளிவாசல்கள் நிர்மாணம்
நாட்டில் இன்று பல பகுதிகளில் எதுவித கட்டுப்பாடுகளுமின்றி புதிதாக பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. வணக்கஸ்தலம் ஒன்று நிர்மாணிக்கப்படும் போது அதற்கெனவுள்ள சில சட்ட விதிகள் பின்பற்றப்படவேண்டும். ஆனால் இலங்கையில் எவ்வித விதிகளும் பேணப்படாமல் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.
வாகனத் தரிப்பிடங்களுக்கு இடம் ஒதுக்கப்படாமல் பெருந்தெருக்களுக்கு அண்மையில் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் பௌத்தர்கள் தீவிரவாதிகள் என பிரசாரம் செய்யப்படுகிறது.
நீதித்துறையில் நம்பிக்கை
எமது நாட்டின் நீதித்துறையின் மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். ஞானசாரதேரரின் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டதாலே இன்று சமாதானம் நிலவுகிறது. இல்லையேல் தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கும்.
என்றாலும் ஆங்கிலேயர் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நீதித்துறைச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும். இன ரீதியான சட்டங்கள் இல்லாமற் செய்யப்படவேண்டும்.
ஞானசாரதேரரின் போராட்டம் வெற்றியளித்துள்ளது. அவரின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு மகா நாயக்க தேரர்கள் முன்வந்துள்ளார்கள். இது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
Post a Comment