முஸ்லிம்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவதோ, பள்ளிவாசல்களைத் தாக்குவதோ புத்த போதனை அல்ல
-விடிவெள்ளி-
அஸ்கிரிய பீடம் உட்பட எமது பிக்குகள் முன்னணியினரால் ஞானசார தேரர் விடயமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள கூற்றுக்கள் எமது பௌத்த தர்மத்துக்கும் நாட்டு நலன்களுக்கும் பாரிய சவாலாகவே அமைந்துள்ளன. ஞானசாரரின் உரைகள், நடவடிக்கைகள் அனைத்தும் எமது நாடு 30 வருடங்களாக எதிர்கொண்ட, அனுபவித்த கசப்பான இருண்ட யுகத்துக்கு இட்டுச்செல்வதாகவே உள்ளன.
எனவே ஞானசாரரின் சொல், செயல் எதனையும் அங்கீரிக்க முடியாது என்பதை எமது மகாநாயக்க தேரர்களும் ஞானசாரவின் ஆதரவாளர்களும் உணர வேண்டும். என ஜயவர் தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். இலங்கைத் தகவல் திணைக்களம் நடாத்திய இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
30 வருட யுத்தத்தினால் துவண்டுபோன எமது நாடு இப்போது குற்றுயிராகக் கிடக்கிறது. இந்நிலையில் இனவாதம் பேசி நாட்டை பாதாளத்தில் தள்ளுவதல்ல எமது பணி. நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு மேலோங்கச் செய்வதே எங்கள் அனைவரதும் முன்னுள்ள பாரிய பொறுப்பாகும். இதற்குப் பதிலாக ஞானசார தேரர் கூறுவது போன்று முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதோ முஸ்லிம் பள்ளிவாசல்களைத் தாக்குவதோ புத்த போதனைக்கு முற்றிலும் எதிர்மறையானதாகும்.
இந்த அடாவடித்தனங்கள் புத்த பெருமானை அவமதிப்புக்குள்ளாக்கும் செயல்களாகவே உள்ளன. புத்தபெருமானையும் புத்த மதத்தையும் பின்பற்றுவோர் அவரது போதனைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும்.இனங்களுக்கு இடையே பேதங்கள் காட்டி குரோதங்களை வளர்க்கக் கூடாது.
இந்தியாவிலுள்ள மிகப் பெரிய நதிகளான கங்கா, யமுனா ஆகிய இரு நதிகளும் வளைந்தோடி சமுத்திரத்தில் இரண்டறக் கலக்கின்றன. அவ்வாறு கலந்த பின் கங்கா, யமுனாவாக அவை இல்லை. மகா சமுத்திரம் என்றாகி விடுகின்றன. அதேபோன்றே இந் நாட்டில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற நான்கு மதங்களும் கலந்தே வாழ்கின்றன.
இவை அனைத்தும் இலங்கையர் என்ற நாட்டுக்குள் ஒன்றுபடுகின்றனர். எனவே ஒன்றுபட்ட மகா சமுத்திரம் போல இந்நாட்டிலுள்ள அனைத்து இன, மத மக்களும் ஒன்றிணந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அப்போதுதான் நாடு அபிவிருத்தி காணும் முன்னேற்றமடையும்.
எனவே, நான் நாட்டு மக்களிடமும் எமது சங்க பீடங்களிடமும் இன, மத பேதங்களைத் தூக்கி எறிந்து விட்டு, நலிவுற்றிருக்கும் நாட்டை ஒன்றுபட்டு கட்டியெழுப்ப எமது சக்திகளைப் பிரயோகிப்போம் என்றே கேட்டுக் கொள்கிறேன்.இன்று நாட்டில் கல்வி, சுகாதாரம் உட்பட எத்தனையே பிரச்சினைகளுக்கு நாடு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இதனைவிடுத்து இனக் குரோதங்களில் எமது கால நேரங்களைப் பிரயோகித்துக் கொண்டிருந்தால் எப்படி நாடு அபிவிருத்தி காணுவது? எனவே எனது பிக்குமார்களே இந்த நல்லவிடயங்களில் உங்கள் அவதானத்தைச் செலுத்துங்கள். இனவாத செயற்பாடுகளை மறந்துவிடுங்கள்.
ஞானசார தேரரின் நடவடிக்கைகள் பௌத்தமதம் சார்ந்ததாகவோ அல்லது நாட்டின் நலன் கருதியதாகவோ அமையவில்லை. எனவே அவரது செயற்பாடுகளுடன் கைகோர்ப்பதோ அவருக்கு உறுதுணை புரிவதோ அல்லது அங்கீகாரம் வழங்கி மேலும் வளர உதவுவதோ நாம் பௌத்த மதத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் துரோகமாகவே அமையும்.
ஞானசார தேரரின் நடவடிக்கைகளை பார்ப்போமேயானால் அடியுங்கள், உடையுங்கள், தீ மூட்டுங்கள் என்றல்லவாயுள்ளன. அந்த அவரது விசமனத்தனமான போதனைகள் நாட்டைப் பாரிய அழிவுப் பாதையிலேயே தான் கொண்டு சென்றுவிடும். அதனால் எமது மகாநாயக்க தேரர்கள் அவருக்காக பரிந்து பேசுவதை விடுத்து அவர் விடயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். எனவே நாம் ஒவ்வொரு வரும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்டு நாட்டு நலனில் அக்கறை செலுத்துவோம்.
(ஏ.எல்.எம்.சத்தார்)
I like his example of maha samudra
ReplyDelete