தமிழ்த் கூட்டமைப்புக்குள் பிளவு, அடம்பிடிக்கும் சீ.வி.விக்னேஸ்வரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிக்கு பங்கமேற்படாமல் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுப்பார் என தான் நம்புவதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனந்தி சசிதரனுக்கு அமைச்சு பதவி வழங்கப்போவதாக கூறிய போது, அவர் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டிருப்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
வடமாகாண சபையில் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில், தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டை கேட்டபோதே ஊடகம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "முதலமைச்சர் சீ.வி.விக்கேஸ்வரன் என்னை சந்தித்த போது அனந்தி சிசதரனுக்கு அமைச்சு பதவி வழங்கப்போவதாக கூறினார்.
எனினும், நான் அதற்கு மறுப்பு வெளியிட்டிருந்தேன். மீண்டும் மறுநாள் காலை தொலைபேசியூடாக என்னை தொடர்பு கொண்ட முதலமைச்சர் அனந்திக்கு அமைச்சு பதவி வழங்கப்போவதாக கூறினார்.
கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடி பதிலளிப்பதாக கூறியிருந்தேன். அதன்படி, கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, எமது கட்சி சார்பில் இ.ஆர்னோல்டுக்கு அமைச்சு பதவி வழங்குமாறு பரிந்துரை செய்திருந்தோம்.
எனினும், தற்போது அவர் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளார். இந்நிலையில், எதிர்கால விடயங்கள் குறித்து பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நான் முன்னர் குறிப்பிட்டதை போன்று அமைச்சுப் பதவிகளுக்குப் போட்டியிட்டுக் கொண்டு, எமது மக்களின் விடுதலையை, அரசியல் தீர்வை தவறவிட முடியாது.
எங்கள் மக்கள் முன்னால் நாங்கள் பிளவுபட்டு நிற்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படாத வகையில் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த சமரச முயற்சிக்குப் பங்கம் ஏற்படாமல் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன்" என மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "வடக்கு மாகாண முதலமைச்சருக்கு, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய இரண்டாவது கடிதத்தில்,
முதலமைச்சர் தமிழ் அரசுக் கட்சியுடன் ஆலோசிக்காமல் செயற்படுகின்றார் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும் அதே விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது அவற்றை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்" என கூறியுள்ளார்.
இதேவேளை, வடமாகாண சபையின் அண்மையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையினையடுத்து கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டிருந்தது.
எனினும், கூட்டமைப்பினரிடையே மேற்கொள்ளப்பட்ட சமரச பேச்சுவார்த்தையினையடுத்து, அந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், தற்போது கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் பனிப்போர் வலுப்பெற்று வருவதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
Post a Comment