அநுர சேனாநாயக்க விடுதலை, விதிக்கப்பட்ட நிபந்தனைகள் எனன..?
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில் கைதான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வசீம் தாஜுதீனை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில், கடந்த வருடம் மே 23 (2016.05.23) இல் கைதான அவர், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததோடு, அவருக்கு பிணை மறுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றைய தினமும் (01) அவரது பிணை மனு, கொழும்பு மேலதிக நீதவானினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக முன்னிலையில் அவரது பிணை மனு விசாரிக்கப்பட்டதோடு, நீதவான் அவருக்கு பிணை வழங்குமாறு உத்தரவிட்டார்.
அதற்கமைய ரூபா 10 இலட்சம் ரொக்கம் மற்றும் ரூபா 50 இலட்சம் கொண்ட மூன்று சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.
குறித்த பிணை நிபந்தனையில், சரீர பிணையாக அவரது நெருங்கிய உறவினர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டதோடு, வாரத்தின் ஞாயிறு தினத்தில் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து கையொப்பமிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தவிர, அநுர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது. அத்துடன், சாட்சியாளர்களை பயமுறுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் எனும், இறுக்கமான பிணை நிபந்தனைகளுடன் அவரை பிணையில் விடுவிப்பதில் சட்ட மாஅதிபருக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
Post a Comment