நாம் பிறை தேடினோம், அவர்கள் கரை தேடினார்கள்..!!
-அபூ ஆமினா-
வெள்ளிக்கிழமை இரவு 10 மணியிருக்கும். ரமழான் தலைப்பிறை கண்ட பரபரப்பில் முழு நாட்டு முஸ்லிம்களும் இருந்து கொண்டிருந்த வேளை. அப்போதுதான் அந்த செய்தி பரவத் தொடங்கியது. "தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் உள்ள பல முஸ்லிம் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. மண்சரிவில் சிக்கி ஒரே வீட்டிலிருந்த மூன்று சிறார்கள் உயிரிழந்துவிட்டார்கள்" என்பதே அந்த செய்தி.
தென் மாகாணத்தின் நிலைமைகளை அறிவதற்காக அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எனது நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டேன். நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என்பதே அவரது பதிலாகவிருந்தது.
" அக்குரஸ்ஸ, போர்வை நகர் முற்றாக நீரில் மூழ்கிவிட்டது. சுமார் 550 முஸ்லிம் குடும்பங்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளன. பலர் வீட்டுக்கூரைகளிலும் மலைகளிலும் தஞ்மடைந்திருக்கிறார்கள். வெள்ளி மாலை 6 மணி வரை சிலரை படகுகளில் சென்று மீட்டோம். அதன்பிறகு இருட்டாகிவிட்டதால் மீட்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாளை காலை அவர்களை மீட்பதாயின் அதிக வலு கொண்ட படகுகள் தேவை. முடிந்தால் படகுகளை அனுப்பச் சொல்லுங்கள்" என்றார் அவர்.
" நோன்பும் ஆரம்பாகிவிட்டது. வெள்ளத்தில் சிக்கி வெளிவரமுடியாதுள்ள மக்கள் உணவுக்கு என்ன செய்வார்கள்? " எனக் கேட்டேன். வெள்ளி காலை முதல் அவர்கள் எதனையும் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே அவர்கள் நோன்பு நோற்றது மாதிரித்தான்" என்றார் அவர்.
ரமழான் ஆரம்பமான மகிழ்ச்சியில் இருந்த என்னை இந்த செய்தி கவலையில் ஆழ்த்திவிட்டது. நிலைமையின் பாரதூரத்தை பிறரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் முடியுமானவர்களை உதவி செய்யக் கோரியும் எனது முகநூல் கணக்கில் பதிவொன்றை இட்டேன்.
முதலில் களத்தில் இறங்கிய பேருவளை மீனவர்கள்
நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகள் பாதிக்கப்பட்டுவிட்டன என்ற செய்தியை அறிந்த தும் வழக்கம் போன்றே இம்முறையும் முந்திக் கொண்டனர் பேருவளை மீனவர்கள். தமது படகுகளை லொறிகளில் ஏற்றிக் கொண்டு இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு விரைந்தனர். வெள்ளத்தில் சிக்கி கரைசேர முடியாதவாறு தத்தளித்த மக்களை இன மத பேதம் பாராது மீட்டெடுத்தனர். அவர்களது துணிச்சலான செயற்பாடுகளும் அர்ப்பணிப்பும் என்றென்றும் பாராட்டத்தக்கவை. அல்லாஹ் அவர்களுக்கு பரக்கத் செய்வானாக.
நாமும் உதவுவோம்
வழமை போன்று நாட்டின் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் நிவாரண உதவிகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை ஒருங்கிணைப்பதற்கான நிலையம் ஒன்று மாத்தறை மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், தேசிய சூறா சபை ஆகியவற்றின் ஓத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ளது. உதவிகளை அனுப்ப விரும்புவோர் இந்த நிலையத்தை தொடர்பு கொள்ள முடியும்.
முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்ற நிலையில் இவ்வாறானதொரு பாரிய அனர்த்தத்திற்கு முகங்கொடுக்கவேண்டி வந்துள்ளது. இந்நிலையில் அம் மக்களது அவலங்கள் நீங்கி இயல்பு வாழ்க்கை திரும்ப இந்த புனிதமான நாட்களில் நமது அமல்களின் போது பிரார்த்திப்போம்.
அரசு என்ன செய்கிறது ?
ReplyDelete