சவால் நிறைந்த சூழலும், முஸ்லிம் சமூகமும்
-அபு அரிய்யா-
நாட்டில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களை இலக்கு வைத்து ஒருசில தீய சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர இனவாதப் பிரச்சாரமானது சூடுபிடித்து தற்போது விஷ;வரூபம் அடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. பல்லின சமூகக் கட்டமைப்பை கொண்டுள்ள இலங்கையைப் போன்ற நாட்டிலே குடிமக்களின் இன நல்லுறவையும் சகவாழ்வையும் பாதிக்கும் வகையில் தற்போது இடம்பெறுகின்ற இதுபோன்ற இனவாதச் செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக தொடர்ந்திருந்த யுத்த சூழலானது படுமோசமான அகோர விளைவுகளையே இந்த நாட்டில் விட்டுச் சென்றுள்ளன. தற்போது மக்கள் அச்சூழலிலிருந்தும் பாதுகாக்கப்பட்டு ஓரளவான நிம்மதிக் காற்றை சுவாசிக்க முற்பட்டிருக்கிறார்கள். இத்தருணத்திலேயே முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து அவர்களினுடைய மத, கலாசார, பண்பாட்டு விடயங்களில் வலிந்து மூக்கு நுழைக்கும் அத்துமீறல்களை சில இனவாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்கள்.
பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டில் அதற்கிடையே குரோதம், வெறுப்புணர்வு, ஆதிக்க மனோநிலை, இனவாதம் போன்ற பண்புகள் வளர முடியாது. ஏனெனில் அவைகள் நாட்டின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் குந்தகம் ஏற்படுத்தும் செயற்பாடுகளாகும். ஆனாலும் இவ்வாறான நிகழ்வுகள் தோற்றம் பெறாமல் நாட்டை வழிநடாத்துவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என்ற வகையில் தற்போதைய அரசாங்கம் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பது முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
அது போல் ஒரு குழுவினரின் செயற்பாடு மொத்த சமூகத்தின் எண்ணமாக அமைய முடியாது என்ற வகையில் சகோதர சிங்கள மக்கள், ஒரு போதும் முஸ்லிம் சமூகத்தின் எதிரிகளல்லர். மாறாக குறித்த நிகழ்வோடு யார் தொடர்புடையவர்களோ அவர்கள் மாத்திரமே கண்டிக்கப்படவும், நீதியின் முன்னிறுத்தப்பட வேண்டியவர்களுமாவர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எப்போதும் போல் நாட்டின் அமைதிக்கும் பிற சமூகத்தின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயற்படுவதோடு, தொடர்ந்தும் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி தீர்மானம் எடுக்கும் பண்பை வளர்த்துக்கொள்வதுதான் முன்மாதிரியுள்ள சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும்.
பொறுமையோடிருத்தல், குனூத் ஓதப் பணித்தல், திக்ர் செய்தல் போன்ற ஆன்மீக கட்டளைகளை நிறைவேற்றுமாறு பணித்தலோடு தமது கடமைகளை நிறைவேற்றிவிட்டதாக சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த தலைமைகள் எண்ணிவிடக்கூடாது.
அதற்கப்பால் எமது சமூகத்தினது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையப்பெறுகின்ற இவ்வாறான இனவாதக் கும்பல்களின் நடத்தைகளிலிருந்து நாட்டையும் சமூகத்தையும் விடுவிப்பதற்கான ஆரோக்கியமான செயற்திட்டங்களை வகுத்து செயற்படுவது சமூகத் தலைமைகள் மீதான தார்மீகக் கடமையாகும்.
இதற்காக எமது நாட்டிலுள்ள சமூகத் தலைமைகள் நாடு தழுவிய முஸ்லிம் சிவில் அமைப்புக்களை இணைத்து எமது அரசியல் சக்திகளைப் பலமாக்கிக் கொண்டு செயற்பட வேண்டிய காலத்தின் தேவை நம்மீது இருக்கிறது.
எப்போதும் நாம் சிக்கல் நிறைந்த பிரச்சினையொன்றின் தோற்றத்தின் பின்னர்தான் அதற்கான தீர்வு குறித்த வழிமுறைகளைத் தேட முற்படுகின்றோம். இது தவறான சிந்தனையாகும். இழப்புகளின் பின்னரான திட்டமிடலில் எந்தப் பயனும் கிடையாது.
Post a Comment