இனமோதல் வெடிக்கும், அரசு மௌனம் காப்பது மிகப் பயங்கரமானது - ராமஞ்ஞ நிகாயபீடம் எச்சரிக்கை
நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் இன மோதல் வெடிக்கும் தறுவாயில் உள்ளது என்பதை வெளிப்படுத்தி வருகின்றன. ஏற்படவுள்ள மோதலை உடனடியாக தடுக்க வேண்டும்.
எனினும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காப்பது மிகவும் பயங்கரமான விடயமாகும் என்று நான்கு பிரதான பௌத்த பீடங்களில் ஒன்றாகிய ராமஞ்ஞ நிகாய பீடம் எச்சரித்துள்ளது.
அரசாங்கம் சரியாக செயற்படாவிடின் பிரதான நான்கு பீடங்களும் இணைந்து நேரடியாக தலையிடவேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அரசாங்கத்தை அந்த பீடம் வலியுறுத்தியுள்ளது.
ராமஞ்ஞ நிகாய பெளத்த தேரர்களின் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீ போதிராஜ தர்ம நிலையத்தில் இடம்பெற்றது. இதில் ராமஞ்ஞ நிகாய தலைவர் அக்கமஹா பண்டித வினயவிசாரத பூஜபாத நாபானபேமஸ்ரீ மகாநாயக தேரர் தலைமையில் கலந்து கொண்ட உயர்நிலை பெளத்த தேரர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அவர்கள் மேலும் கூறியதாவது;
நாட்டின் இன்று இடம்பெற்று வரும் நிலவுகள் மிகவும் மோசமான வகையில் அமைந்துள்ளன. பௌத்தம் மற்றும் சிங்கள கொள்கைகள் அழிந்து வரும் நிலைமையில் இன்று அரசாங்கதின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இந்த நாடு அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்ட காலத்தில் தனி சிங்கள பெளத்த கொள்கையில் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அதன் பின்னரான அரசியல் சூழ்நிலை இந்த நாட்டின் பெளத்த சிங்கள கொள்கையை படிப்படியாக அழித்துக்கொண்டு வருகின்றமையே உண்மையாகும்.
இன்று அரசாங்கம் தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஒவ்வொரு அமைப்புகளை வைத்துக் கொண்டு நாட்டில் இனவாதத்தை பரப்பி வருகின்றது. கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் தமது தேவைக்காக சில மத அமைப்புகளை இயக்கி அதன் மூலம் இனவாத அரசியலை மேற்கொண்டு வருகின்றன. இந்த நாட்டில் சட்டம் நீதித்துறை சரியாக செயற்படும் என்றால் இந்த நாட்டில் இனவாதம் ஒருபோதும் தலைதூக்கப் போவதில்லை. எனினும் அரசியல் காரணிகளுக்காக இன்று இனவாதம் பரப்பப்பட்டு வருகின்றது.
கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த நாட்டில் ஆயுத யுத்தம் ஒன்று இடம்பெற்ற காலத்திலும் கூட இந்த நாட்டில் கிராமங்களில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். பயங்கரவாதிகள் ஒருபுறம் மோதல்களை மேற்கொண்ட போதிலும் மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டனர் . எனினும் யுத்தம் முடிவுக்கு வந்த இந்த குறிப்பிட்ட சில காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனவாதம் தலைதூக்கி நாட்டில் வன்முறைகள் தலைதூக்கியுள்ளன.
இப்போது நாட்டில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் நாட்டில் இன மோதல் ஒன்று வெடிக்கும் தறுவாயில் உள்ளது என்பதை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த மோதலை உடனடியாக தடுக்க வேண்டும். நாட்டில் எந்த மதமும் பாதிக்கப்படும் வகையில் எந்த சம்பவங்களும் இடம்பெறக் கூடாது.
இந்த நாட்டில் பௌத்தம் பிரதான மதமாக இருந்த போதிலும் நாட்டில் வாழும் சகல மக்களையும் பௌத்தர்கள் ஆகிய நாம் பாதுகாக்க வேண்டும். இந்த நாட்டில் இன ஐக்கியத்தை உறுதிப்படுத்தி அதன் மூலம் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும். உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு இன ஒற்றுமை எம்மத்தியில் உள்ளது.
இந்த நாடு சகல மக்களையும் பிரதிபலிக்கும் நாடாகும். ஆகவே இங்கு சமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டும்.எனினும் இந்த அரசாங்கம் மிகவும் மோசமான வகையில் மத விடயங்களில் செயற்பட்டு வருகின்றது. சட்டம் சரியாக செயற்பட்டால் எந்த மதத்தவரும் குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அரசாங்கம் மௌனம் காப்பது மிகவும் பயங்கரமான விடயமாகும்.
நாம் பெளத்த தலைவர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றோம். இந்த செயற்பாடுகள் நிருத்தபப்ட வேண்டும். இல்லையேல் நாம் நேரடியாக தலையிடவேண்டிய நிலைமை ஏற்படும். பிரதான நான்கு பெளத்த பீடங்களும் இன்று ஒரே நிலைப்பாட்டில் உள்ள நிலையில் விரைவில் எமது இணைந்த அறிக்கை வெளியிட நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
எனினும் நாம் அவ்வாறு செயற்படுவதன் மூலம் அரசாங்கம் பாரிய பின்னடைவை சந்திக்க வேண்டி வரும். இங்கு உள்ள சகல பெளத்த சிங்கள மக்களும் பிரதான நான்கு பீடங்களில் எதோ ஒரு பீடத்துடன் இணைந்து வாழ்கின்றனர்.
எனவே நாம் எடுக்கும் முடிவை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். அதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.
Excellent! Allah wish HIDHATH u & others
ReplyDelete