ரிஸ்வி முப்தியின் கோரிக்கைக்கு, பொதுபல சேனா பச்சைக்கொடி
-ARA.Fareel-
பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்கள் மீது சுமத்திவரும் குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் என்பவற்றை ஆராய்ந்து தீர்வுகளை சிபாரிசு செய்வதற்கு ஜனாதிபதி சுயாதீனக் குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி விடுத்துள்ள வேண்டுகோளை பொதுபலசேனா அமைப்பு வரவேற்றுள்ளது.
உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி விடுத்துள்ள வேண்டுகோளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே 'விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் டிலன்த விதானகே தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
எமது அமைப்பு முழு முஸ்லிம் சமூகத்தையும் எதிர்க்கவில்லை. முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளையே எதிர்க்கிறோம். அவர்கள் தொடர்பிலேயே நாம் முறையிடுகிறோம். அவர்களையே சந்தேகிக்கிறோம். எனவே நாம் முழு முஸ்லிம் சமூகத்தையும் எதிர்க்கிறோம் என தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாது.
ஜனாதிபதி நியமிக்கும் சுயாதீனக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் யார் என்பது தொடர்பிலும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சுயாதீனக் குழுவின் சிபாரிசுகள் மூலம் பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படுமென்றால் நாமும் மகிழ்ச்சியடைவோம்.
நியமிக்கப்படும் குழுவுக்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பெரும்பான்மைச் சமூகம் எதிர்நோக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் முன்வைக்கத் தயாராக உள்ளோம்.
ஞானசார தேரரும் பிரச்சினைகளை மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டல்களின் கீழ் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கே விரும்புகிறார் என்றார்.
Post a Comment