Header Ads



பசுவின் பெயரால் முஸ்லிம்கள் படுகொலை - முதன்முதலாக வாய்திறந்த மோடி

குஜராத் மாநிலம் சபர்மதிக்கு வருகை தந்த பிரதமர் மோதி, கடவுள் பக்தி என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கொலைகள் குறித்துதன்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

''பசு வழிபாடு என்ற பெயரில் கொலைகள் நடப்பது ஏற்றுக் கொள்ள முடியாது, மகாத்மா காந்தி இவற்றை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் '' என்று பிரதமர் மோதி கூறியுள்ளார்.

மேலும்,''இந்த சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை'', என்று மோதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஹிந்துக்கள் பலர், பசு மாட்டை புனிதமான விலங்காகக் கருதுகிறார்கள். பல மாநிலங்களில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் அடித்துக் கொல்லப்பட்ட சில தினங்களுக்குப் பிறகு அவரது இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

பசு பாதுகாவலர்கள் என்று கூறப்படுவோரால், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் தாக்கப்படுவதற்கு எதிராக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணிகள் நடைபெற்றது. இதில், கட்சி சார்பின்றி, பல முக்கியப் பிரமுகர்கள் உள்பட சமூகத்தின் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்த வார இறுதியில், சென்னையிலும், லண்டன், டொரன்டோ, பாஸ்டன், கராச்சி உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களிலும் இதுபோன்ற பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந் நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தின் 100-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய மோதி, எந்த ஒரு தனி நபருக்கும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டார்.

பசு பாதுகாவலர்கள் குறித்து பேசிய மோதி, ''பசுவின் பெயரால் நாம் எப்படி மக்களை கொல்ல முடியும்?'' என்று கேள்வி எழுப்பினார்.''ஒருவரை கொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறதா, இது கோழைத்தனம் இல்லையா?'' என்று மோதி கேள்வியெழுப்பியுள்ளார்.

பசு பாதுகாப்புக் குறித்து, மகாத்மா காந்தி மற்றும் வினாபா பாவே ஆகியோரைப் போல அதிகம் குரல் கொடுத்தவர்கள் யாரும் இருக்க முடியாது என்றார் மோதி.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் மோதி, இதுபோன்று கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இருந்தபோதிலும், மாட்டிறைச்சி உண்டதாகவோ அல்லது கால்நடைகளைக் கொன்றதாகவோ குற்றம் சாட்டி, முஸ்லிம்களை வன்முறைக் கும்பல் தாக்கில் கொல்வது தொடர்கிறது.

No comments

Powered by Blogger.