இழிவான செயலைக்கண்டு வெட்கப்பட வேண்டியவர் இந்நாட்டின் ஜனாதிபதியே.
ஒவ்வொரு சமயமும் மனிதனுக்கு நல்லவற்றையே போதித்துள்ளன. எம் மத்தியில் பலமதங்கள் காணப்படுகின்றன. கிறிஸ்தவம், இந்து, பௌத்தம், இஸ்லாம் போன்ற மதங்கள் காணப்படும். அதேவேளை ஒரு நாட்டில் வாழும் ஒரு பிரஜை அவர் விரும்பும் மதத்தில் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயற்பட, வழிபாட்டில் ஈடுபட பூரண உரிமையுண்டு. இவர்கள் பல மதங்களைப் பற்றியவர்களாகவும் செயற்படுகின்றனர்.
அந்த வகையில் ஒரு இனத்தவர் பின்பற்றும் மத கோட்பாடுகளுக்கு மாற்றுமதத்தைச் சேர்ந்த இன்னொரு இனத்தவர்களினால் அவர்களின் மத கடமைகளை நிறைவேற்ற விடாமல் தடை செய்வது, இடையூறு ஏற்படுத்துவது, அவமதிப்பது, தூசிப்பது, அச்சுறுத்துவது, மதத்தவர்களைத் தாக்குவது போன்றவைகள் அரசியல் யாப்பில் மதம், கலாசார விடயங்களை வலியுறுத்தும் 10,11,12 ஆம் சரத்துக்கு சவால் விடும் ஒரு செயலாகும்.
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கென 1000 ஆண்டு கால பழைமைவாய்ந்த சிறப்பான வரலாறுகள் உண்டு என்பதனையும் முஸ்லிம் மக்கள் வந்தேறுகுடிகள் என்று கோஷமிடும் காவியுடையணிந்த இனவாதத்தைத் தூண்டுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இந்த இலங்கை எவ்வளவு பழைமை வாய்ந்ததோ அவ்வளவு பழைமையானவர்களே இந்நாட்டு முஸ்லிம்கள் என 1956 ஆம் ஆண்டு பாராளுமன்றில் உரையாற்றிய போது முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்க குறிப்பிட்டார். அந்த வகையில் இலங்கையில் 8 ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரையும் முஸ்லிம்கள் முன்னைய கால சிங்கள மன்னர்களோடும் சிங்கள மக்களோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் வேண்டியவர்களாகவும் விளங்கினர்.
1948 இல் இலங்கையின் சுதந்திரத்திற்காக சிங்கள தலைமைகளோடு தோளோடு தோள் நின்று உழைத்த டீ.பீ.ஜாயா போன்றவர்கள் உட்பட அறிஞர் சித்திலெப்பை, பாக்கிர் மாக்கார், பதியுதீன் மஹ்மூத் போன்றவர்கள் இந்நாட்டின் இன ஐக்கியத்திற்காகவும் இன ஒற்றுமைக்காகவும் அயராது உழைத்தனர். இதன் காரணமாக அன்றைய சிங்கள ஆட்சியாளர்களினாலும் சிங்கள மக்களாலும் முஸ்லிம்கள் மதிக்கப்பட்டதுடன் நிம்மதியாகவும் வாழ்ந்தனர்.
இந்நாட்டில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 1915 இல் முதன் முறையாக அநகாரிக தர்மபாலவின் தலைமையில் தொடக்கி வைக்கப்பட்டது. கலவரத்தில் முஸ்லிம்கள் பல கோடிரூபாய் சொத்துகளையும் உயிர்களையும் இழந்தனர்.
இருந்தும் முஸ்லிம்கள் பொறுமை காத்தனர். இந்நாட்டில் இனவாதத்தை விதைத்தவர்கள் தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ அல்லர் பௌத்தர்களே ஆரம்பித்தனர். இது போன்று துப்பாக்கி கலாசாரத்தையும் பௌத்தர்களே ஆரம்பித்து வைத்தனர். 1959 ஆம் ஆண்டு எஸ் .டபிளியூ. ஆர். டீ. பண்டாரநாயக்க இலக்கு வைக்கப்பட்டார். இதைச் செய்தவரும் ஒரு பௌத்த பிக்கு என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
கண்ணியமாகவும் மேன்மையாகவும் படைக்கப்பட்ட மனிதன் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றார்களோ தெரியவில்லை. இந்நாட்டில் வாழும் 80 சதவீதமான சிங்களவர்கள் இனவாதத்தை ஒருபோதும் விரும்பாதவர்கள். மாறாக இந்நாட்டில் வாழும் சகல மக்களும் இன ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழவேண்டும் என்றே விரும்புகின்றனர்.
உதாரணமாக மறைந்த சோபித தேரர் சிறுவயதுதொடக்கம் மரணம் வரையிலும் இந்நாட்டு மக்களின் இனநல்லுறவைக் காப்பதற்காக அயராது உழைத்த மனிதரில் மாணிக்கமாகும். இன்றைய நல்லாட்சியைக் கொண்டுவருவதற்காக தன்னையே அர்ப்பணித்தார். இந்நாட்டில் முஸ்லிம் மதத் தலைவர்களோ அல்லது ஐயர்கள், கிறிஸ்தவ குருமார்களோ அரசியல் செய்வதில்லை.
ஆனால் காவியுடையணிந்த துறவிகளான பிக்குகள் அரசியல் செய்வதோடு நின்று விடாமல் ஆட்சியாளர்களுக்கு சவால் விடுபவர்களாக, சட்டங்களைக் கையிலெடுத்தவர்களாக, நீதியையும் நியாயத்தையும் அவமதிப்பதுடன் சண்டியர்களாக, காடையர்களாக முஸ்லிம்களின் மத விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் நிந்திப்பதுடன் நின்று விடாமல் முஸ்லிம்களை தூசித்தும் வசைபாடியும் வருகின்றனர்.
இலங்கை பௌத்தர்களின் நாடு என்ற பாணியில் முஸ்லிம்கள் வந்தேறுகுடிகள் என்றும் கோஷம் எழுப்புகின்றனர். ஆனால் பொதுபல சேனா போன்ற இனவாதிகள் இலங்கையின் வரலாற்றைப் புரிந்து கொள்ளாதவர்களாக செயற்படுகின்றனர். இலங்கையைப் பொறுத்தமட்டில் இங்கு வாழும் அனைவரும் வந்தேறு குடிகள்தான் என்பதனை மறந்துவிடக்கூடாது.
தற்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடாவடித்தனமானது இந்நாட்டை நேசிக்கும் எந்தவொரு ஜனநாயக மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பௌத்தத்துறவிகள் தங்களின் இடங்களிலிருந்து தங்களின் மதக்கடமைகளை செய்யவேண்டும்.
அதுதான் அவர்கள் அணிந்திருக்கும் காவியுடைக்கு செய்யும் மரியாதையாகும். புத்த பெருமான் தனது போதனையின் ஆரம்பத்தில் இனங்களுக்கிடையிலான சமத்துவம், சௌபாக்கியம், சாந்தி, சமாதானம், விட்டுக்கொடுத்தல், ஒழுக்க விழுமியங்களையே போதனை செய்தார். ஆனால், தற்போதைய இனவாதம் கொண்ட சில பிக்குகளின் இழிவான நடவடிக்கையானது புத்தபெருமானின் நற் சிந்தனைகளையும் ஒட்டுமொத்த பௌத்தர்களையும் களங்கப்படுத்துவதுடன் முஸ்லிம்களின் உள்ளங்களையும் புண்படுத்துவதாகவே உள்ளன.
முஸ்லிம்களுக்கெதிராக பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களை வேடிக்கை பார்த்ததினால் ராஜபக் ஷ உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச உலகிலும் பாரிய அவமானத்தைப் பெற்றுக்கொண்டார். மேற்படி அடக்குமுறைகளிலிருந்து விடுபடவே கடந்த 2015 இல் முஸ்லிம்கள் தற்போதைய ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து நல்லாட்சியைக் கொண்டுவரலாயினர்.
முஸ்லிம்களின் மத உரிமை மற்றும் அனைத்து விடயங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்கியவர் தற்பொழுது பொதுபல சேனாவின் அடாவடித்தனங்களை தடுத்து நிறுத்த முடியாமல் இருப்பதன் மர்மம்தான் என்ன? சந்தேகங்களை எழுப்பியுள்ளன. உண்மையாகவே இவ்வாறான இழிவான செயலைக்கண்டு முதல் வெட்கப்பட வேண்டியவர் இந்நாட்டின் ஜனாதிபதியே.
இவ்வாறான அடாவடித்தனங்களிலிருந்து நாட்டையும், ஜனநாயகத்தையும், நீதியையும் சட்டத்தையும் அதன் மக்களையும் பாதுகாக்கவேண்டிய முழுப் பொறுப்பும் ஆட்சியாளர்களின் கட்டாய கடப்பாடாகும். இஸ்லாம் ஒரு தூய மார்க்கம் என்ற அடிப்படையில் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அதனைப் பின்பற்றியவர்களாகவே ஏனைய மதத்தவர்களுடன் நல்லிணக்கம் கொண்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.
முஸ்லிம்கள் இந்நாட்டில் பல சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம்கொடுத்தபோதும் அவைகளை மிகவும் பொறுமையுடன் எதிர்கொண்டார்கள். ஆனால், தற்போதைய முஸ்லிம்களுக்கெதிரான இந்த அடாவடித்தனங்களை நோக்கும்போது பொதுபல சேனாவின் முழு நோக்கமும் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய ஒரு நிலைமையை உருவாக்கவே முயற்சித்துக்கொண்டிருப்பது தெளிவாகப் புரிகின்றது.
சில இனவாத, கும்பல்களின் கேவலமான அட்டூழியங்களை முஸ்லிம்கள் மிகவும் நிதானத்துடனும், அமைதியுடனும் அணுகி, பொறுமை காத்தவர்களாக, நோன்பு நோற்றவர்களாக, ஐவேளை தொழுகையிலும் மேற்படி குளறுபடிகளில் இருந்து தம்மை விடுவித்து நாட்டில் நல்லிணக்கத்தையும், அமைதியையும், நிம்மதியையும் தரவேண்டுமென அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் நாம் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுவோமாக.
-யூ.எல்.ஏ.மஜீட்-
மதங்களை நிந்திக்கும் மதகுருவே உள்ள தேசமிதுவே. அதை மனதார இருந்து பார்த்துக் கொண்டு ஆட்சி செய்யும் தலைவரின் இடுப்பில் சக்தி உண்டோ தெரியாது.
ReplyDeleteOur leader my3 and janasara
ReplyDeleteHe not deserve as a president just comedy man.
ReplyDeleteதெரியாய்த்தனமாக ஒட்டு போட்டுவிட்டோம் ,இனி சிந்தித்து வாக்களிப்போம்,
ReplyDelete