"இலங்கை வீரர்கள் காயமடைய, முக்கிய காரணம்" - அவுஸ்திரேலிய டாக்டரின் கண்டுபிடிப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பன்னிருவரில் ஒன்பது பேர் கடந்த வருடம் உபாதைக்குள்ளானதை அடுத்து வீரர்கள் உபாதைக்குள்ளாவதைத் தவிர்க்கும் நோக்கில் அவுஸ்திரேலிய டாக்டர் நிக்கலஸ் ஸ்ப்ரெஞ்சரின் ஒத்துழைப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பெற்றுள்ளது.
அடிக்கால் மற்றும் கால் எலும்பு மற்றும் நரம்புகள் சார்ந்த மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் நீச்சலில் வெள்ளிப் பதக்கம் வென்றவராவார்.
இலங்கை வீரர்கள் உபாதைக்குள்ளாவதற்கு அவர்களது அடிக்கால்களின் அமைப்பே காரணம் என அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய நிக்கலஸ் ஸ்ப்ரெஞ்சர், ‘‘இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலர் உபாதைக்குள்ளாவதற்கு அவர்கள் தட்டையான அடிக்கால்களைக் கொண்டிருப்பதே பிரதான காரணம். அத்துடன் பொருத்தமற்ற பாதணிகளை அவர்கள் பயன்படுத்துவது மற்றொரு காரணம்’’ என்றார்.
தொடை, கெண்டைக்கால், கணுக்கால் ஆகிய பகுதிகளில் ஏற்படும் உபாதைகளைத் தவிர்க்கும் வகையில் கிரிக்கெட் விளையாட்டிற்கு உகந்த பாதணிகளை அவர்கள் அணிவதே சிறப்பான அறிவுரை என அவர் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்த நிக்கலஸ் ஸ்ப்ரெஞ்சர் வீரர்களின் பாதங்களின் அளவுகளை எடுத்து அவரவர் பாதங்களுக்கு பொருத்தமான பாதணிகளை அவுஸ்திரேலியாவில் தயாரித்து கொண்டுவந்துள்ளார். பயிற்சிகளின்போதும் கிரிக்கெட் போட்டிகளின்போதும் இரு வகையான பாதணிகளைப் பயன்படுத்துவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பாதணிகளுடன் அவர்கள் விளையாடும்போது உபாதைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார் நிக்கலஸ்.
கால்களில் 26 எலும்புகளும் 102 தசைநார்களும் இருப்பதாகத் தெரிவித்த அவர், வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது அவர்களது உடல் பாரம் முழுவதையும் ஒரு நொடிப்பொழுதுக்கு அடிக்கால் தாங்குவதால் உபாதைகள் ஏற்படுவதாகவும்; இதற்கு பொருத்தமான பாதணிகளை அணியாதமையே காரணம் எனவும் அவர் கூறினார்.
‘‘இலங்கை அணியினர் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் வருகைதந்த நிக்கி, வீரர்களின் பாதங்களின் அளவை எடுத்துக்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிச் சென்றார். அங்கு பாதங்களின் அளவுக்கு ஏற்ப பொருத்தமான பாதணிகளைத் தயாரித்துக் கொண்டு மீண்டும் வருகை தந்துள்ளார். இங்கு இரண்டு தினங்கள் தங்கியிருக்கும் அவர், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 30 முதல் 35 வீரர்களைப் பரீட்சிப்பார்.
இந்தத் திட்டத்திற்கான முழுச் செலவினங்களையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது’’ ஆனால் எவ்வளவு செலவாகும் என அவரிடம் கேட்டபோது தொகையை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
(நெவில் அன்தனி)
Post a Comment