அநாதரவற்றுக் கிடக்கும் வடமத்திய மாகாண, தமிழ்மொழி பட்டதாரிகள்
-M.S.M. Naseem-
தமிழ் மொழி மூலமான ஆசியர் பற்றாக்குறை அதிகம் காணப்படுகின்ற பாடசாலைகளைக் கொண்ட பிரதேசங்களில் வடமத்திய மாகாணமும் ஒன்றாகும். இதனை நிவர்த்தி செய்ய கடந்த காலங்களில் வெளி மாவட்டங்களிலிருந்து ஆசியர்கள் நியமிக்கப்படுவதும் அவ்வாறு நியமனம் பெறுபவர்கள், சிறிது காலம் இப்பகுதிகளில் சேவையாற்றிவிட்டு பின்னர் குருக்கு வழியில் அரசியல் வாதிகளின் ஆதரவுடன் தங்களது பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றமையும் காலம் காலமாக நடந்துவருகின்ற ஒன்றாகும். இதனால் குறிப்பிட்ட பாடசாலைகளில் குறித்த துறைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்ந்தும் காணப்படுகிறது. மேலும் இவ்வாறு ஏற்படும் வெற்றிடங்களை நிவர்த்திக்க தகுதி குறைந்த ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர்(சில பாடசாலைகளில் விஞ்ஞானம் மற்றும் கணிதத்துறை சார்ந்த பாடங்களை வர்த்தகத்தக மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும், உயர்தர பாடங்களை இடைநிலை வகுப்புக்களுக்கு கற்பிக்க தகுதி பெற்ற ஆசிரியர்களும் கற்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது). இதனால் இப்பிரதேச மாணவர்களின் அடைவ மட்டம் குறைந்த நிலையில் காணப்படுவதுடன் அவர்களது எதிர்காலமும் கேள்விக் குறியாகவே காணப்படுகின்றது.
எனினும், தற்போது வடமத்திய மாகணத்தில் தகுதி வாய்ந்த போதுமான பட்டதாரிகள் காணப்படுகின்றனர். இவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள கடந்த மார்ச் மாதம் தேர்வுப் பரீட்சை ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது. இப்பரீட்சை நடந்து, சுமார் 4 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், அப்பரிட்சைப் பெறுபேருகள் இன்னும் வெளியிடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயத்தில் தமக்கு உதவ யாரும் முன்வராமல் இருப்பதால் இப்பிரதேச பட்டாதாரிகள் அதிருப்தியடைந்து காணப்படுகின்றனர். மேலும், இம்மாகணத்தில் முஸ்லிம்கள் சார்பில், ஒரு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள் என பலர் இருக்கின்ற போதும் இதற்கு தீர்வு பெற்றுத்தர முன்வராமல் இருப்பது கவலைக்கிடமான விடயமாகும்.
எனவே, வடமத்திய மாகணத்தின் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் காணப்படும் ஆசியர் பற்றாக்குறைக்கும் அப்பகுதியிலுள்ள தகுதி வாய்ந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நீதி பெற்றுத்தர யாரும் முன்வருவார்களா???
Post a Comment