அதிகம் பேசப்படும் ஒன்றாக, கட்டார் மாறியுள்ளது
சர்வதேச ரீதியாக மத்திய கிழக்கு நாடுகளால் ஒதுக்கப்பட்ட கட்டார் பற்றியே அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில் கட்டார் நெருக்கடி இலங்கையையும் நேரடியாக பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கட்டார் ரியால் மாற்றும் செயற்பாடுகளை இலங்கையின் நான்கு வணிக வங்கிகள் நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அட்டவணையில் கட்டார் ரியாலின் பெறுமதி குறைவடைந்தள்ளது.
கட்டார் ரியால் ஒன்றின் கொள்முதல் விலை 39.09 ரூபாவாக இன்று பதிவாகியிருந்தது. நேற்றைய தினம் கிட்டத்தட்ட 40 ரூபாய் என்ற கணக்கை காட்டிய ரியால் இன்றைய தினம் ஒரு ரூபாயில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கட்டார் நாட்டுடனான ராஜதந்திர உறவை கைவிடுவதற்கு 5 அரபு நாடுகள் நேற்றைய தினம் தீர்மானித்ததனை தொடர்ந்து கொழும்பின் பிரதான தரப்பு நிதி நிறுவனங்கள் கட்டார் பணத்தை மாற்றும் நடவடிக்கைகளை இரத்து செய்ததாக பிபிசி செய்தி ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கட்டார் ரியாலின் நிதி பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்தால் நட்டம் ஏற்க நேரிடும் என்பதனால் அந்த பணம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை இன்று காலை கட்டாரில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்த விமான பயணிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரியாலினை மாற்றிக் கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்தனர்.
விமான நிலையத்தின் வணிக வங்கிகளில் நிறுவப்பட்டிருந்த நாணய மாற்று வீத காட்சி படுத்தும் இடத்தில் கட்டார் ரியால் தொடர்பில் காட்சி படுத்தப்படவில்லை.
அத்துடன் விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற கடைகளிலும் கட்டார் ரியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என கட்டாரில் இருந்து இன்று காலை இலங்கை வந்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்ட மத்திய வங்கி, கட்டார் ரியாலை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என ஏனைய வங்கிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாக கூறப்படும் செய்தியை நிராகரிப்பதாக குறிப்பிட்டது.
இந்த அறிக்கை வெளியாகியதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு சென்று ஆராய்ந்த போது, தங்கள் உண்மை நிலைமையை வெளியிட விரும்பாத அரசாங்க வங்கி அதிகாரிகள், காலை 10.30 மணி முதல் கட்டார் ரியால் குறிப்பிடத்தக்க அளவு ரூபாய்க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதன் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஸ்ரீலங்கன் விமான சேவை கட்டாருக்கு மேற்கொள்கின்ற விமான பயணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்வதில்லை என அதன் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள் இராஜதந்திர உறவுகளை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையினால் கட்டாரில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் அந்த நாட்டு இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகேவிடம் வினவிய போது, இந்த தீர்மானத்தை தொடர்ந்து கட்டாரில் வாழும் லட்சக் கணக்கிலான இலங்கையர்கள் தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்டார் நெருக்கடியினால் இலங்கையர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment