கற்பித்துக் கொண்டிருந்து விரிவுரையாளர், மயங்கிவிழுந்து மரணம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விரிவுரையாளர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மொழியியல்துறை முதுநிலை விரிவுரையாளரான இவர் கடந்த 26 ஆம் திகதி மாணவர்களுக்கு தமிழ் கற்பித்துக்கொண்டிருந்த போது மாரடைப்பால் மயங்கி விழுந்துள்ளார்.
பொலன்னறுவை, மன்னம்பிட்டியைச் சேர்ந்த கலாநிதி எஸ்.வை.ஸ்ரீதர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் கற்றுப் பட்டம் பெற்று, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
அத்துடன், சிங்கள மாணவர்களுக்கு தமிழும், தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும் கற்பித்து இன நல்லிணக்கத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளார். ஏராளமான தமிழ் பட்டதாரிகள் உருவாகுவதற்கு பாடுப்பட்டுள்ளார்.
எனவே இவரது மரணம், பலாங்கொடை உள்ளிட்ட பகுதிகளின் கல்விச் சமூகத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது பூதவுடல் பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பலாங்கொடை, பளீல் ஹாஜியார் மாவத்தை, 52ஏ இலக்க இல்லத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளரின் இறுதிக்கிரியை நாளை மறுதினம் காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment