Header Ads



பள்ளிவாசலை பாதுகாக்கும் இந்துக் குடும்பம் - 600 மரங்களை நாட்டி சாதனை

-bbc-

பப்லுவுக்கு நிற்கக்கூட நேரமில்லை. ரமலான் மாதம், ஈகைத் திருநாள், எத்தனை வேலைகள்? கான்பூரில் இருக்கும் மசூதியின் துப்புரவுப் பணியில் பப்லு ஈடுபட்டிருக்கிறார்.

சுமார் நூறு ஆண்டுகளாக இந்த மசூதியின் பாதுகாப்பு மற்றும் துப்புரவுப் பணியில் பப்லுவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். பப்லு மூன்றாவது தலைமுறையாக பராமரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளார்.

முதலில் பப்லுவின் தாத்தா, பிறகு பப்லுவின் தாய், இப்போது பப்லு என மூன்று தலைமுறையாக ஒரு இந்துக் குடும்பம் உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஒரு மசூதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணியை மேற்கொண்டுள்ளது வியப்பூட்டும் தகவல்.

"என் தாத்தா மஹாவீர், பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர், 15 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி கான்பூருக்கு வந்துவிட்டார்."

"தற்போது கான்பூர் பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் அந்தக் காலத்தில் மணிக்கூண்டு இருந்தது. என் தாத்தா ஐந்து நாட்கள் பட்டினியாக இருந்து வேலை தேடினார், வேலையும் கிடைக்கவில்லை, பசியும் அடங்கவில்லை" என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார் பப்லு.

"அப்போது இந்த மசூதியின் பொறுப்பாளரான மெளல்வி ஃபக்ருதினை சந்தித்தார் தாத்தா. மெளல்வி ஐயா, என் தாத்தாவை மசூதிக்கு அழைத்து வந்து அடைக்கலம் கொடுத்தார். இங்கேயே தங்கிவிட்ட எனது தாத்தாவுக்கு துப்புரவு பணி கொடுக்கப்பட்டது" என்கிறார் பப்லு.

"ஈத் பண்டிகைக்கு முன்னர் மசூதி முழுவதையும் சுத்தம் செய்து, நமாஸுக்கு வருபவர்களுக்காக தயார் செய்துவைப்பார் தாத்தா" என்று நினைவலைகளை தொடர்கிறார் பப்லு.

மஹாவீருக்கு இருக்க இடமும், செய்ய ஒரு வேலையும் கிடைத்தது, பிறகு அவருக்கு திருமணமும் நடந்து, நான்கு குழந்தைகளும் பிறந்தது. அவரது குடிசையானது காலப்போக்கில் ஒரு கட்டடமாக உயர்ந்துவிட்டது.

தந்தையின் பணியை தொடரும் மகன்

அன்று மஹாவீரால் தொடங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் துப்புரவுப் பணியை அவரது 45 வயது பேரன் பப்லு தற்போது தொடர்கிறார். ஈகைத் திருநாள் வருவதையொட்டி, 15 நாட்களுக்கு முன்னரே துப்புரவுப் பணிகளை பப்லு தொடங்கிவிடுகிறார். பண்டிகையன்று சிறப்புத் தொழுகைக்காக அனைவரும் வருவார்கள் அல்லவா?

எல்லா இடங்களிலும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கான்பூரின் மத்தியில் பேஜாஜ்பர் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மசூதியில் உயரமான பச்சை பசேலென்ற மரங்கள் நெடிதுயர்ந்து நிற்கின்றன. மாமரம், புளியமரம், வேம்பு, எலுமிச்சை, பலா என பலவகையான 600 மரங்கள் இங்கு உள்ளன.

"இங்கு இருக்கும் மரங்கள் எல்லாம் என் தாத்தாவால் விதைக்கப்பட்டது, இப்போதும் பலனளிக்கிறது" என்று பெருமையுடன் சொல்கிறார் பப்லு.

1984 ஆம் ஆண்டு மஹாவீர் இறந்துபோனதும், பாதுகாப்பு மற்றும் துப்புரவுப் பணி பப்லுவின் தாயார் தெளலத் தேவியின் கைக்கு வந்த்து. தெளலத் தேவி 30 ஆண்டுகள் மசூதியை பராமரித்தார். "வயதான பிறகு முன்புபோல் வேலை செய்யமுடியவில்லை, நான் வேலை செய்து ஐந்து ஆண்டுகளாயிற்று," என்று சொல்கிறார் தெளலத் தேவி.

இப்போது பொறுப்பு பப்லுவின் கைக்கு வந்துவிட்டது. இங்கேயே பிறந்து வளர்ந்த பப்லுவுக்கு மசூதி வளாகத்தில் உள்ள மூலை-முடுக்குகள் எல்லாம் அத்துப்படி.

"எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முழு மனதுடன் பொறுப்பாக நிறைவேற்றுகிறேன். ஆனால், பிற இந்துக்களைப் போலவே நானும் ஒரு சாதாரண இந்துதான். இந்துப் பண்டிகைகளை மற்றவர்களைப் போலவே நானும் கொண்டாடுவேன். எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை" என்கிறார் பப்லு.

அவர் சொல்கிறார், "ஈத் பண்டிகையன்று, புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் இருக்கவேண்டியிருக்கும். சமூக விரோத சக்திகள் எதுவும் மசூதிக்குள் வந்துவிடக்கூடாதல்லவா? "
கான்பூரில் பல மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், மசூதியை விட்டு வெளியேறவேண்டும் என்ற எண்ணம்கூட தெளலத் தேவிக்கு தோன்றியதில்லை. வேறு யாரும் அவரை பணியில் இருந்து விலகவும் சொல்லவில்லை.
இந்த மசூதி 150 ஆண்டுகள் பழமையானது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்று என்று மசூதியின் கமிட்டியில் உறுப்பினர் மொகம்மத் ஃபக்ரே ஆலம் சொல்கிறார்.
அவர் சொல்கிறார், "இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகப்பெரிய உதாரணம் பப்லு, ஒரு இந்து, மசூதியை பாதுகாக்கிறார், பராமரிக்கிறார், சுத்தப்படுத்துகிறார் இஸ்லாமியர்களுக்காக. இதுவரை எங்களுக்கு அவராலோ, அவருக்கு எங்களாலோ எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டதில்லை".
பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்ற உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு பப்லுவும், கான்பூர் மசூதியும் உதாரணங்கள்தான்.

1 comment:

  1. More than 150 years we have missed the message of Islam for many,including the current BABLU

    ReplyDelete

Powered by Blogger.