Header Ads



தனியார் ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லையை 60 வரை உயர்த்த யோசனை

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லையை 55 இலிருந்து 60 வரை உயர்த்துவதற்கான யோசனை ஒன்றை முன்வைப்பதற்கு, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது.  

அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை, இவ்வாரத்துக்குள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.  

இவ்வாறான யோசனையொன்று, தொழிற்சங்கங்கள் பலவற்றினால் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் இடம்பெறவிருக்கின்ற தேசிய தொழிலாளர் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து, அறிக்கையொன்றைத் தயாரித்து, அதனையும் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.  

தனியார்த்துறை ஊழியர்கள் 55 வயதில் ஓய்வூதியம் பெறவேண்டும். எனினும், அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அரச துறை மற்றும் தனியார் துறை ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள ஒத்திசைவின்மையை நீக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரியிருந்தன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, 55 வயதில் ஓய்வூதியம் பெறுகின்றவர்களில் பலர், அந்த வேலைத்தளத்தில் அல்லது வேறொரு தனியார் நிறுவனத்தில் கடமையாற்றுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

பல நிறுவனங்களில், வருடத்துக்கு வருடம் வழங்குகின்ற சேவைக்கால நீடிப்பு அல்லது கூட்டொப்பந்தத்தின் அடிப்படையில் அவை முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ள அமைச்சர், இந்த செயற்பாட்டினால், தங்களுக்கு கிடைக்கின்ற சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் குறைந்துவிடுகின்றன என்றும் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

ஆகையால், அரச, ஊழியர்கள் மற்றும் சேவை ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்றாகும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில், இந்த விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி, பெறப்படும் அறிக்கையை, அமைச்சரவைக்கு முன்வைப்பேன் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.    

No comments

Powered by Blogger.