2 பள்ளிவாசல்களை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிளும், தேரரும் கைது
-MFM.Fazeer + விடிவெள்ளி-
பாணந்துறை நகரிலும் எலுவில பகுதியிலும் இரு பள்ளிவாசல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய கும்பலை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்ஸாவின் கீழ் செயற்பட்ட சிறப்புப் பொலிஸ் குழுவே இவர்களைக் கைது செய்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதானியுமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். கைதான நால்வரில் பொது பல சேனா அமைப்புடன் இணைந்து செயற்பட்ட பெளத்த தேரர் ஒருவரும், கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி சுட்டிக்காட்டினார்.
' இனங்கள், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதன்படி பதிவான வெறுப்பூட்டும் அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் தனித்தனியான பொலிஸ் குழுக்களைக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்தோம். இந் நிலையில் தற்போது அந்த விசாரணைகளின் பலன் தெரிய ஆரம்பித்துள்ளது.
மே மாதம் 17 ஆம் திகதி பாணந்துறை பகுதியில் எலுவில முஸ்லிம் பள்ளிவாசல் மீதும் அதற்கு முன்னைய தினம் பாணந்துறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியமை, எலுவில பகுதியில் இரு முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலேயே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு தேரரும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் இரு சிவிலியன்களும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் இந்த குற்றங்களைப் புரிவதற்காக பயன்படுத்திய கெப் வாகனம் ஒன்று, இரு வாள்கள், ஒரு ஹொக்கி மட்டை மற்றும் பெற்றோல் குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியனவும் மீட்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதன் போதே அவர்களை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதனை விட கடந்த மே 20 ஆம் திகதி குருநாகல், மல்லவபிட்டி பகுதியில் ஜும் ஆ பள்ளி வாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பிரதான சந்தேக நபருக்கு சொந்தமான கடை அறையில் இருந்து இனவாத போஸ்டர்கள் பல மீட்கப்பட்டன.
சந்தேக நபர்களில் பலர் பொதுபல சேனாவின் செயற்பாட்டு உறுப்பினர்களாவர். உண்மையில் பாணந்துறை சம்பவத்தில் கைதான பௌத்த தேரர் பொதுபல சேனாவின் செயற்பாடுகளுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவர். பொலிஸ் உத்தியோகத்தர் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர். அவர் கடந்த இரு வருடங்களாக பொலிஸ் சேவையில் இருந்து விலகி இருந்துள்ளதுடன் அண்மையிலேயே மீள இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தவர்.
எனவே இன, மதவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தராதரம் பார்க்காது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்பதை கூறுகின்றோம் என்றார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலுவில பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இரு வர்த்தக நிலையங்கள் மீதும் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் கடந்த மே 17 ஆம் திகதி பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் நால்வர் கொன்ட குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளமை ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் ஒரு வர்த்தக நிலையம் மீது தாக்குதல் நடத்தும் காட்சி அருகில் உள்ள கடை ஒன்றின் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியிருந்தன.
அதே போல் மே 16 ஆம் திகதி பாணந்துறை பழைய பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களிடையே அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலின் மேல் மாடி பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியது.
இப்பள்ளிவாசலுக்கு பின் பக்கமாக பாணந்துறை குப்பைமேடு அமைந்துள்ள நிலையில் அப்பகுதியை நோக்கி பள்ளிவாசலில் ஜன்னல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்னலே உடைக்கப்பட்டு மேல்மாடிக்கு பெற்றோல் நிரப்பப்பட்ட போத்தல்கள் ஊடாக தயாரிக்கப்படும் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன.
so is this prove not enough to ban BBS as a terrorist organization?
ReplyDeleteNot enough; until they attack the properties of My3 & Ranil.
ReplyDelete