Header Ads



பேஸ்புக் மூலம் மோசடியில் ஈடுபட்ட 25 பேர் கைது


 பேஸ்புக்கின் ஊடாக நபர்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்த, வெளிநாட்டுப் பிரஜைகள் 25க்கும் அதிகமானோரைக் கைது செய்துள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், நைஜீரியா மற்றும் உகண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அறியமுடிகின்றது.  

சந்தேகநபர்கள், பேஸ்புக்கின் ஊடாக, பல்வேறான நபர்களுடன் நண்பர்களாகுகின்றனர்.

அதன்பின்னர், தங்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசு கிடைக்கும் என்றும், அதற்காக குறிப்பிட்ட தொகையை, முதலீடு செய்யவேண்டும் என்று ஏமாற்றியே இவ்வாறு பணம் வசூலித்து வருவதாக அறியமுடிகின்றது.  

பெறுமதிவாய்ந்த பரிசை அனுப்புவதற்கான, சுங்கக் கட்டணம் மற்றும் காப்புறுதி கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டுமென்று கூறியே, இவ்வாறு பணமோசடியில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக அறியமுடிகின்றது.  

அவ்வாறு பண மோசடி செய்தமை தொடர்பில், 15க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.  

சந்தேகநபர்களான வெளிநாட்டவர்கள், நீர்கொழும்பு, கல்கிஸை, தெஹிவளை. காலி மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் தற்காலிக வாடகை வீடுகளில் தங்கியிருந்தே இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.  

இந்த சந்தேகநபர்கள் சுமார் 50 மில்லியன் ரூபாய்க்கும் மேல், மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் சுற்றுலா மற்றும் கல்வி கற்பதற்கான விசாவில் வருகைதந்தே இவ்வாறான மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.  

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக, இவ்வாறு பல்வேறான குற்றங்கள் மற்றும் மோசடிகள் இடம்பெறுவது சமுகத்தில் அதிகரித்துள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.