தடுப்பூசி போட்ட 15 குழந்தைகள் மரணம்
தென் சூடான் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 15 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் சூடானில் தட்டமை எனப்படும் நோய் அதிகளவில் பரவி வருவதால் சுமார் 2 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் இப்பணி நடைபெற்று வருவதால் தடுப்பூசி மருந்து சரியாக பராமரிக்கப்படுகிறதா? தகுதியான நபர்கள் இப்பணியில் ஈடுப்படுத்தப்பட்டு வருகின்றனரா? என்ற கேள்விகள் அண்மையில் எழுந்துள்ளன.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 வயதிற்கு குறைவான 15 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, ஒரே ஊசியை 15 குழந்தைகளுக்கும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
மேலும், தடுப்பூசிகள் தரமானதாக இல்லை எனவும், இப்பணியில் 12 வயதிற்கு குறைவான சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஜாக்கிரதை மற்றும் மருத்துவ தகுதி இல்லாமல் செயல்பட்டது தொடர்பாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தென் சூடான் அரசு தெரிவித்துள்ளது.
தென் சூடானில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பிற்கு ஐ.நா சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment