10 இலட்சம் தபால்கள் தேக்கம்
தபால் தொழிற்சங்கம் முன்னெடுக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான தபால்களும், ஏனைய தபால் பொதிகளும், தபால் மற்றும் உப-தபால் காரியாலயங்களில் தேங்கிக் கிடக்கின்றன என, தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் ஊடாகவும் மற்றும் கடல் தபால் ஊடாக கடிதங்கள் மற்றும் பொதிகள் விநியோகம் செய்வதும் முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளன. தபால் ரயில்களிலும் எவ்விதமான தபால் பொதிகளும் கடந்த மூன்று நாட்களும் ஏற்றப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம், தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அரசாங்கத்தால் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தபால் திணைக்களத்துக்கு உரித்துடைய வளங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் உறுதியளிக்குமாயின், அத்தருணத்திலேயே வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு, கடமைக்குத் திரும்புவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment