முஸ்லிம்கள் இன, மத பேதங்களைக் கடந்து உதவிபுரிவோம் - ரிஸ்வி முப்தி
'நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் அனர்த்தத்தினால் நாம் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகளை இழந்து விட்டோம்.இலட்சக்கணக்கானோர் அகதிகளாகி விட்டார்கள். அதிகமானோர் காணாமல் போய்விட்டார்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முஸ்லிம்கள் நாம் இன, மத பேதங்களைக் கடந்து உதவிபுரிவோம்'.
என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
‘அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை மஸ்ஜிதுகளின் உதவியுடன் நிவாரண உதவிகள் மற்றும் உதவிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு அருகிலுள்ள மக்களும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும்.
நபிகள் நாயகத்தின் காலத்தில் மஸ்ஜிதுகளை மையப்படுத்தியே அனர்த்தங்களின் போது நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அன்று மஸ்ஜிதுகளில் குறிப்பிடக்கூடிய நான்கு அம்சங்கள் மையமாகக் கொள்ளப்பட்டிருந்தன. இவற்றில் சமூகசேவையும் ஒன்றாகும். மஸ்ஜிதுகள் தாஈக்களை உருவாக்கின. மேலும் மார்க்க அறிவு போதிக்கப்பட்டது. ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் தேவையான அறிவு வழங்கப்பட்டது. மற்றும் இபாதத் போதிக்கப்பட்டது.
உலமா சபையும் மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்டே தற்போது சமூக சேவைகளை முன்னெடுத்து வருகிறது. மஸ்ஜிதுகள் நல்லிணக்க நிலையங்களாகவும் கல்வி நிலையங்களாகவும் மாறிவருகின்றன.
திடீரென ஏற்படும் அனர்த்தங்களின் போது உதவி செய்யும் மனப்பான்மை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்தது. நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும். அவர் ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளைச் செய்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுல் நபவி எப்படி இருந்ததோ மஸ்ஜிதுல் நபவியில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டனவோ அவை எமது பள்ளிவாசல்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
-ARA.Fareel-
ALHAMDULILLAH
ReplyDelete