தற்போதைய நிலைக்கு, முஸ்லிம்களும் காரணமா..?
-Shaheemullah Iqbal-
முஸ்லிம் விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் அனைத்து சக்திகளினதும் செயல்பாடுகள் அண்மைக் காலமாக நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலைமை யாவரும் அறிந்த விடயமே. அவர்களை அவர்களின் வழியிலேயே சற்று விட்டுப் பார்ப்போமானால் தத்தமது கரங்களாலேயே தமக்கு நாசம் விளைவித்துக்கொண்டுள்ளனர் என்ற உண்மையும் புரிந்துவிடும். ஆனால் இத்தகையதோர் ஆபத்தான காலகட்டத்தில் நமது முஸ்லிம் சமூகத்திலும் ஒருசில சகோதர சகோதரிகள் வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டும் கட்டுப்பட்டு பின்விளைவுகள் பற்றிய ஆழமான சிந்தனையில்லாமல் மிகவுமே மோசமான சொற்பிரயோகங்களுடன் முகநூல் வழியாக ஒருவகையான வாத விவாதங்களில் ஈடுபட்டு வருகின்ற ஒரு அவலநிலை ஏற்பட்டுள்ளது மிகவுமே கவலையை தருகின்றது.
"இஸ்லாம்" என்ற மிக உன்னதமான கொள்கையை எதிர்ப்பதற்கும், "முஸ்லிம்" என்கின்ற ஒரு இனத்தை எதிர்ப்பதற்கும் சில முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ள கடமைப் பட்டுள்ளோம். சுருக்கமாக இதனை விளங்கிக் கொள்வதானால் நபிமார்களுடைய வரலாறு ஒன்றே இதற்குப் போதுமானது, ஆனால் துரதிஷ்டவசமாக இறைவனால் அருளப்பட்ட புனித மார்க்கக் கொள்கைகளை இலங்கை மண்ணில் நிலைநாட்டும் பணியொன்றை செய்வதற்காக 8% முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வெளிக்கிளம்பிய காரணத்தால் உருவான ஓர் எதிர்ப்பு அல்ல இந்த கும்பல்களின் போராட்டத்துக்கான காரணம்.
மாறாக எமது சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சியும், படைப்பிணங்களுக்குரிய கடமைகளை சரிவர செய்யத்தவறியதுமே மிக முக்கியமான காரணிகளாகும்.
எனவே இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது முஸ்லிம்களின் தலைமைகளினதும், உலமாக்களினதும், புத்திஜீவிகளினதும் வழிகாட்டல் இன்றைய நமது சகோதரர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. இல்லையெனில் உணர்ச்சிவயப்படும் ஒருசிலரின் பதிவுகளால் நாளுக்குநாள் நிலைமை தீவிரமடைந்துகொண்டு செல்வதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும் பேரபாயம் வெகுதொலைவில் இல்லை.
நமது ஜும்மா மேடைகள், பாடசாலைகள், முஸ்லிம் நிகழ்ச்சிகள் போன்றன இவ்வறிவூட்டல்களுக்காகப் பயன்படுத்தப்படல் காலத்தின் தேவையெனக் கருதுகிறேன். வெறும் வார்த்தைகளால் மட்டும் வீராப்பு பேசி நடுநிலையாக இருக்கும் பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்புக்களையும் சேர்த்தே தினம் நாம் சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றோம். ஒரு அரசாங்கத்தையோ ராணுவத்தையோ நம்பி உரிமைகளுக்காக போராடுகிறோம் என்று சிலர் களத்தில் குதித்துள்ளனர்.
இன்னும் சிலர் அல்லாஹ்வே இவர்களை அழித்துவிடுவான் துஆக்கேளுங்கள் சீதேவிகளே என்று முடித்துக்கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் சந்தர்ப்பத்தை நன்றாகவும் கச்சிதமாகவும் பயன்படுத்திக்கொள்வதில் கண்ணும் கருத்துமாகவுள்ளனர். பொருள்களையும் உடமைகளையும் இழந்து பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தெருவில் செய்வதறியாது தவிக்கின்றனர். மேலும் சிலர் முகநூல் வாயிலாக மடத்தனமாக எண்ணைக்குப் பக்கத்தில் நெருப்பு வரிகளை அள்ளிக்கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்!
எங்கே எப்போது இனவாதம் இலங்கையிலும் வெடித்துச் சிதரப் போகிறது, மியன்மாரில், குஜராத்தில் போன்று எத்தனை தலைகள் நிலத்தில் உருளப்போகிறது, பச்சிளம் குழந்தைகள் தீயிலிட்டுக் கொளுத்தப்படப் போகின்றனர் என நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சர்வதேசம் ஒருபுறமிருக்க, தீவிரவாதக் கும்பல்களை போலீஸ் எப்போது கைது செய்யப்போகிறார்கள் என்ற அழுத்தத்தை வழங்கப் போராடுவதைவிடவும், இப்படிப்பட்ட நிலைமைகளில் நமது சமூகத்தில் குறிப்பாக ஆவேஷத்துடனும் கோபத்துடனும் அவசர புத்தியுடனும் எந்தவித வழிகாட்டலோ கட்டுப்பாடோ இல்லாமல் செயல்படும் மனிதர்களுக்கு வழிகாட்டுவதே எமது தலைமைகளினதும் புத்திஜீவிகளினதும் பள்ளிவாயில் நிறுவாகிகளினதும் முதல்தர கடமை என்பதனை மறந்துவிடலாகாது.
இனிமேலாவது ஊருக்கு ஊர் போட்டிபோட்டுக்கொண்டு பள்ளிவாயில்களையும் பாடசாலைகளின் கட்டடங்களையும் கட்டியெழுப்புவதில் காலையும் மாலையும் அயராது உழைக்கும் நலன்விரும்பிகள் கொஞ்சம் நமது சமூகத்தின் ஒற்றுமையையும் அதன் பண்பாட்டினையும், கட்டுப்பாட்டினையும், பொருளாதார ஸ்தீரத்தன்மையையும், ஆளுமையையும், ஒழுக்கத்தையும், நிதானத்தையும் சேர்த்தே கட்டியெழுப்பும் பணியிலும் ஈடுபடுவோம்! அத்தகையதோர் பாரிய முயற்சியின் பின்னர் கேற்கும் துஆக்களை வல்லநாயன் பத்ரினில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டவை போல அங்கீகரித்து ஈருலகிலும் அவனின் அடியார்களுக்கு வெற்றியைத் தந்தருளப் போதுமானவன் இன்ஷா அல்லாஹ்..!
Shaheemullah Iqbal
we are responsible for things happening around us. we are muslims but
ReplyDeletewe do not have good qualities.they are non muslims they fear to their god. but we do not. this is not enough come more then this.