Header Ads



வதந்திகளை நம்பாதீர்கள், திடீர் வெள்ளம் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்..!

“வங்காள விரிகுடா கடற் பகுதியில் நிலவும் தாழமுக்கம், பங்களாதேஷ் நோக்கிப் பயணிக்கும் நிலையில், வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். இந்த மாற்றம் ஏற்பட்டால், இன்றும் நாளையும், நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் வடமேல் மாகாணத்திலும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான  மழைவீழ்ச்சி, அங்கு பதிவாகக்கூடிய சாத்தியம் உள்ளது என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தது.  

“மேலும், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய நிலை காணப்படுவதால், களுத்துறை மாவட்ட மக்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், கடற்பிரதேசங்களை அண்மித்த பகுதியில் வாழ்வோர், அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஜே.ஜயசேகர தெரிவித்தார்.  

“குக்குலே கங்கை அணை உடைந்துள்ளதாகப் பரவி வரும் செய்தியில், எவ்வித உண்மையுமில்லை. அதனால், மக்கள் தேவையின்றிப் பீதியடையத் தேவையில்லை” எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், “தற்போது வரையில், ஜிங், களு, களனி ஆகிய கங்கைகளின் நீர் மட்டம் சாதாரணமாக உள்ளதாகவும்  நில்வளவை கங்கையின் நீர் மட்டமே அதிகரித்துள்ளதாகவும் பகுதிகள் நீர்ப்பாசனப் பணிப்பாளர்  எம்.எம். துரைசிங்கம் தெரிவித்தார்.

“மேலும், களுத்துறை, வாத்துவ மற்றும் பாணந்துறை மக்கள், தற்போதைக்கு அச்சம்கொள்ளத் தேவையில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.  “களு கங்கையின் நீர் மட்டம் சாதாரண நிலையிலேயே உள்ளதால், களுத்துறை - பனாபிட்டிய அணை நிரம்பி வழியக்கூடிய நிலை குறைவாகவே காணப்படுகிறது. அதனால், களுத்துறை, வாத்துவ மற்றும் பாணந்துறை மக்கள், தற்போதைக்கு அச்சம் கொள்ள தேவையில்லை.

“எதிர்வரும் தினங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதால், ஜிங், களு, களனி பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

“திடீரென்று வௌ்ளம் ஏற்படும் என்பதால், நில்வளவை நீர்த்தேக்கத்துக்கு அருகில் இருப்போர், அவதானமாக இருக்க வேண்டும்.  இதன்படி, கொடகம, ஹித்கெடிய, துடாவ, மாலிம்பட பகுதிகளில் வசிக்கும் மக்கள், அவதானத்துடன் செயற்பட வேண்டும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். 

1 comment:

  1. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
    (அல்குர்ஆன் : 41:39)

    ReplyDelete

Powered by Blogger.