Header Ads



மனித மிருகங்களிடம் கெஞ்சிய முகமது நயீம் - மோடியின் இந்தியா நாறுகிறது...!

தலையில் பலத்த காயத்துடன், உடலின் பாதியளவுக்கு இரத்தம் தோய்ந்த நிலையில், ஒருவர் தனது உயிர்பிரியும் கடைசி நிமிடங்களில், தன்னைத் தாக்குபவர்களிடம் கையெடுத்து வணங்கி, உயிருக்காக கெஞ்சும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் மூன்று குழந்தைகளின் தகப்பனான முகமது நயீம் என்பவர் ஆவார்.

மனதை உலுக்கும் அந்தக் கடைசி நிமிடங்களில், தான் செய்யாத குற்றத்திற்காக கொல்லப்படுவதை எண்ணி நிச்சயம் வருந்தியிருப்பார் அவர். ஆம், உண்மையில் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை.

வாட்ஸ் ஆப்பின் வழியே வதந்தியாகப் பரவிய ஒரு செய்தியால் தான் இவர் கொல்லப்பட்டிருக்கிறார். அந்தச் செய்தியில் குழந்தைத் திருடர்கள் அதிகமாக உலாவி வருவதாகவும், தங்கள் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றிருந்திருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம், ஜாம்செட்பூரில் உள்ள சோபர்பூர் எனும் மலைவாழ் கிராமத்தில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காட்சிலா எனும் பகுதியைச் சேர்ந்த முகமது நயீம், தொழில்நிமித்தமாக நண்பர்கள் நால்வருடன் சோபர்பூரைக் கடந்துசென்றபோது, நால்வரையும் சுற்றிவளைத்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களை இழுத்துச் சென்று காட்டுமிராண்டித் தனமாக தாக்கி கொன்றுள்ளனர். இதில் நயீமின் கடைசி நிமிடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இந்தச் செய்தியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

இதற்கு முந்தைய வாரம், இதேபோல் மேலும் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கூடுதல் சோகம். சந்தேகத்திற்காக ஒருவரை சிறைபிடிப்பதென்றால், காவல்துறையின் முன்பாக நிறுத்துவதே சரியாக இருக்கும். ஆனால், தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்து, செய்யாத குற்றத்திற்கு, மரணத்தை அவர்களுக்கு தண்டனையாகக் கொடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, குதுப்தீன் அன்சாரி என்பவர் உயிருக்காக கையெடுத்து வேண்டிக்கொள்ளும் காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தின. ஆனால், தகுந்த நேரத்தில் அன்சாரி காக்கப்பட்டார். நயீமிற்கு அது நடக்கவில்லை.

சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்தபோதும், நயீம் படுகாயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் மற்ற மூவரும் அந்தப்பகுதியின் அருகிலேயே கொடூரத்தாக்குதல்களுக்குப் பலியாகினர். தாக்குதலில் உயிரிழந்த நயீமின் மனைவி அவரது சொந்த கிராமத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரி. நயீமிற்குக் கொடுக்கப்பட்ட ரூ.2லட்சம் நிவாரணத் தொகையை, அவர் ஏற்க மறுத்துவிட்டார். அவர்கள் தற்போது நீதிவேண்டி, நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

மரணிக்கும் தருவாயில் நயீம் கையெடுத்து உயிர்ப்பிச்சை கேட்கும் காட்சி, மனிதாபிமானம் படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டதற்கான சான்று. சமூக வலைதளங்களில் பரவிவரும் புரளிகளை நம்பி, தொடர்கொலையில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே நம் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கைகள்.

- ச.ப.மதிவாணன்


No comments

Powered by Blogger.