இலங்கைக்கு இவ்வருடம், மேலதிக ஹஜ் கோட்டா இல்லை
சவூதி அரேபியாவில் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் உலகளாவிய ரீதியில் 5 இலட்சத்து 40 ஆயிரம் ஹஜ் கோட்டா விநியோகித்துள்ளதால் இலங்கைக்கு இவ்வருடம் மேலதிக ஹஜ் கோட்டா கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தெரிவித்தார்.
அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தலைமையிலான குழு அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்று ஹஜ் விவகாரங்கள் தொடர்பாக கிழக்காசிய ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பாளர் கலாநிதி ராபித் பத்ரை சந்தித்துக் கலந்துரையாடியது.
இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கைக்கு மேலதிக ஹஜ் கோட்டா கோரியபோதே மேலதிக கோட்டா வழங்கும் வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இலங்கையிலிருந்து சென்ற குழு இலங்கை ஹஜ்முகவர்கள் சவூதியில் எதிர்நோக்கும் சவால்கள், முஅல்லிம் கட்டணங்கள், மதீனாவில் போக்குவரத்து வசதிகள், ஹோட்டல் கட்டணங்கள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடியது.
இலங்கை ஹஜ் முகவர்கள் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் செய்து கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள் உத்தியோகபூர்வமாக வங்கிகள் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டுமென சவூதி ஹஜ் அதிகாரிகள் இலங்கைக் குழுவினரிடம் தெரிவித்தனர்.
Post a Comment