முஸ்லிம்களின் உரிமைக்காக பாடுபட்ட, தேசிய வீரர் ஜாயா
சமுதாய உயர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மகோன்னத பணியாற்றிய மர்ஹும் கலாநிதி துவான் புர்ஹானுத்தீன் ஜாயாவின் 57 ம் வருட நினைவு நாள் இன்றாகும். 57 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மறைந்தார். புனித மதீனா பூமியில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். கலாநிதி ரீ.பீ. ஒரு தேசிய வீரர், அரசியல் தலைவர், பெரும் அறிஞர், கல்விமான்.
ஜாயா என்ற உயரிய நாமம் எக்காலமும் பேசப்படுகிறது. அவரின் சேவைகள் என்றும் நினைவு கூரப்படுகின்றன. அவர் மேற்கொண்ட கல்விப் பணிகள் மகத்தானவை. முஸ்லிம் கல்வி மேம்பாட்டில் அவரின் பங்களிப்பு காத்திரமாக அமைந்தது. அவர் தூரநோக்குடன் செயற்பட்ட ஒரு ஒப்பற்ற தலைவர். நேர்மைக்கு அணிகலனாகத் திகழ்ந்து முன்மாதிரி காட்டியவர்.
நல்லாசான், சிறந்த அதிபர், ஆற்றல்மிக்க கல்விமான் என்றெல்லாம் கொள்ளப்பட்ட கலாநிதி ஜாயா அரசியலிலும் பிரகாசித்தவர். அமைச்சராகவும், உயர்ஸ்தானிகராகவும் அவர் சேவையாற்றினார். 1924 இல் சட்ட நிரூபணச் சபையில் பிரவேசித்த ஜாயா, நாடளாவிய ரீதியில் இனவாரித் தொகுதி ஒன்றின் மூலம் சட்ட நிரூபண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூவருள் ஒருவராவார்.
தமிழ்த் தலைவரான சேர் பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர் ஜேம்ஸ் பீரிஸ் போன்ற தலைவர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொண்ட கலாநிதி ஜாயா, தேசிய காங்கிரஸில் சேர்ந்து பாடுபட்ட ஒரு தலைவராவார். சுதந்திர தேசிய கோரிக்கைப் போராட்டங்களில் சிங்களத் தலைவர்களுடன் இணைந்து அவர் செயலாற்றினார்.
சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதியாக இருந்து கொண்டு முஸ்லிம்களின் நல உரிமைகளுக்காக எப்போதும் அவர் குரல் கொடுக்கத் தவறவில்லை. முஸ்லிம்கள் நலன்களுக்காகப் பாடுபட்டார்.
ஜாயா நாட்டை நேசித்த ஒரு தலைவர். தேசாபிமானமிக்க அவர் 'எவ்வித முன் நிபந்தனைகளும் இன்றி நாம் தேசிய சுதந்திரத்திற்காகப் போராடுவோம். எமக்கு சுதந்திரமே இன்றியமையாதது. மற்றவற்றை நாம் பின்னர் பா்த்துக் கொள்வோம்' என்று கூறினார்.
1925 இல் ஜனவரி 29ம் திகதி சட்ட சபையில் ஜும்ஆத் தொழுகைக்கு விடுமுறை வழங்குவது தொடர்ப்பான சட்டவரைவு சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வேளை கலாநிதி ஜாயா ஆற்றிய உரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பதிவாகியது. இலங்கை அரசு இப்பெரும் தலைவரின் நினைவாக ஞாபகார்த்த முத்திரை வெளியிட்டுக் கௌரவித்துள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் மூலம் முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பை வலியுறுத்தி செயற்பட்டார். முஸ்லிம் கல்வியில் அவரின் சேவைகள் மகத்தானவை. கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபரான அவர், ஸாஹிரா மூலம் முஸ்லிம் கல்வித் துறை மேம்பாட்டுக்கு அரும் சேவைகளை வழங்கினார். 59 மாணவர்கள், ஆறு ஆசிரியர்களுடன் ஸாஹிராவை அவர் பொறுப்பேற்றார்.
அவர் இளைப்பாறும் வேளை 3500 க்கும் மேற்பட்ட மாணவர்களும், 150 ஆசிரியர்களும் ஸாஹிராவில் இருந்தனர்.
நாட்டின் பல்வேறு பாகங்களில் ஸாஹிராக் கல்லூரிகள் உருவாகின. முஸ்லிம் பெண்களின் கல்வி மேம்பாட்டிலும் அவர் தீவிர ஆர்வம் கொண்டார்.ஆசிரிய சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் அவர் பாடுபட்டார். அகில இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்து ஆசிரியர்களின் நலன்களுக்கும் பாடுபட்டு உழைத்தார்.
அவர் மனிதாபிமானத்தை நேசித்தார், பொறுமையாக இருந்து காரியங்களை அனாதியாக, அலட்டிக் கொள்ளாமல் மேற்கொண்டார். பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கவின் அரசில் தொழில், சமூக சேவைகள் அமைச்சராகப் பதவி வகித்து சேவைகளை நிறைய புரிந்தார். இலங்கையின் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக அவர் நீண்ட காலம் இராஜதந்திர பணியாற்றினார். புதிதாக உருவான பாகிஸ்தானின் அரசிலமைப்பை தயாரிப்பதில் கலாநிதி ஜாயா பிரதமர் லியாகத் அலி கானுக்கு உதவினார். பாகிஸ்தான் அரசு அவருக்கு கெளரவ பிரஜை வழங்கி கௌரவித்தது.
1960 மே 31 ம் திகதி கலாநிதி ஜாயா புனித மதீனாவில் காலமானார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜன்னதுல் பக்கீயில் அவரின் ஜனாஸா சவூதி அரசின் ராஜாங்க மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மர்ஹும் ஜாயாவின் நினைவுகள் எக்காலமும் நிலைபெற வேண்டும். வளரும், இளம் தலைமுறையினருக்கு தலைவர் ஜாயாவின் வாழ்வு முறைகள் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.
எப்.எம். பைரூஸ் .
The great personality.
ReplyDeleteHe has done immense services to the Muslims of this country. May almighty Allah illuminate his grave and grant him Jannathul Firdouse!
ReplyDelete