நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !
-மெளலவி ஜஹாங்கீர் அரூஸி-
என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல்! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன்.
நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத்தான்! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.
என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்!
இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற் காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டை களிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். ''கூடா நட்பு கேடாய் முடியும்'' என்ற பழமொழி மறந்து விட்டதோ?
டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது.
ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர் (சீரியல்) களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளி யாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ..... ஜெய்னம்பு பீவியே ... படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய்?
எனதருமை தெரியாத மனிதர்களே! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை கேளுங்கள்;
''திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.'' (அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்ற தாகி விடுகிறது.
என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனிதனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்க கூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.
ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய்! உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணு முணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது! எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான் !
என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளி மயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந் தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்!
Post a Comment