அல்லாஹ்வின் பாதை என்று கூறிக்கொண்டு, முஸ்லிம்கள் எமது காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள்
-ARA.Fareel-
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் உச்சத்தை எட்டியுள்ளது. சவூதி அரேபியா இங்கு வஹாபிஸத்தை போஷித்துள்ளது. அல்லாஹ்வின் பாதை என்று கூறிக் கொண்டு முஸ்லிம்கள் எமது காணிகளை ஆக்கிரமிக்கிறார்கள். தொல்பொருட்களை அழிக்கிறார்கள். வனங்களை அழிக்கிறார்கள். அரசாங்கம் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அவர்களை சவூதிக்கு ஏற்றி அனுப்பிவிட வேண்டும் என பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பயங்கரத்தை நாம் கடந்த அரசுக்கும் கூறினோம். இந்த அரசுக்கும் கூறினோம். ஆனால் முஸ்லிம்களின் வாக்குகளுக்கு ஏமாந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காதிருக்கிறார்கள். இது மீதொட்டமுல்லை குப்பை மேடு போன்ற பிரச்சினையாகும். பந்தினை கைமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிறியதாக உருவான மீதொட்டமுல்லை குப்பை மேடு பூதாகரமாகியதை நாம் கண்டோம்.
நாடு சுதந்திரம் பெற்று 69 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் சிங்களவர்கள் நாட்டில் போர்டிங்காரர்களாக, விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் போலாகி விட்டார்கள். நாட்டின் சொந்தக்காரர்களாக முஸ்லிம்கள் மாறி வருகிறார்கள். எனவே பௌத்தர்கள் நாம் நாட்டைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.
இந்நாட்டிலுள்ள சம்பிரதாய முஸ்லிம்களும் சவூதியிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகளுக்கு ஆசைப்பட்டு வஹாபிஸத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். ஐ.ஐ.ஆர்.ஓ, ஐ.ஆர்.ஓ, அல் ஷபாப், முஸ்லிமாத், ஹிரா, நிதா, செரண்டிப் போன்ற 10 அமைப்புகள் இலங்கையில் தீவிரவாதத்தைப் பரப்பி வருகின்றன. ஹிரா அமைப்பின் தலைமையகம் தெஹிவளையில் இருக்கிறது. இங்கு ஜமாஅத்தே இஸ்லாமி மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது
.
மலிக் அப்துல்லா பல்கலைக்கழகம்
ஹிரா பவுண்டேசனின் உதவியில் 1500 கோடி ரூபா செலவில் கிழக்கில் ஓர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்று முஸ்லிம்கள் இப்பல்கலைக்கழகத்தை அமைக்கிறார்கள். இங்கு அரபு மொழி போதிக்கப்படவுள்ளது. இஸ்லாமிய கலாசாரம் போதிக்கப்படவுள்ளது. இப்பல்கலைக்கழகத்துக்காக முன்னாள் ஜனாதிபதி 500 ஏக்கர் காணி வழங்கியுள்ளார். இங்கு இஸ்லாமிய தீவிரவாதிகளே உருவாக்கப்படவுள்ளனர். இந்நிலையில் நாட்டில் நல்லிணக்கம் ஒன்றினை எதிர்பார்க்க முடியுமா?
சைட்டம் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள் ஏன் இந்தப் பல்கலைக்கழகத்தை எதிர்க்கவில்லை.
மாணிக்கமடு விவகாரம்
மாணிக்கமடுவில் முஸ்லிம்கள் 2 ½ ஏக்கர் காணியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். இது விகாரைக்குச் சொந்தமான காணியாகும். அவர்கள் அல்லாஹ் கூறியுள்ளதைப் போன்று மாற்று மதத்தவர்களின் காணிகளை அபகரித்துள்ளார்கள். இப்போது எமக்கு மாற்றுக் காணி தாருங்கள் நாம் போகிறோம் என்கிறார்கள்.
முகுது விகாரை, ஏறாவூர் பகுதிகளிலும் இவ்வாறே காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன. சிங்களவர்களும் வனப் பிரதேசங்களையும் ஏனையவர்களின் காணிகளையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும். பின்பு எமக்கு மாற்றுக் காணி தாருங்கள் போகிறோம் என்று சொல்ல வேண்டும் என்று சிங்கள மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மஹாநாயக்க தேரரரை மாற்ற வேண்டும்
மஹாநாயக்க தேரர்கள் இறுதிக்காலம் வரை பதவியில் இருக்கக் கூடாது. மகாநாயக்க தேரர்கள் மத விடயங்களில் உறுதியாக இல்லாமையினாலேயே இன்று பௌத்தம் சவாலுக்குட்படுத்தப் பட்டுள்ளது.
எனவே மகாநாயக்க தேரர் பதவிக்காலம் 5 வருடங்களாக அமைய வேண்டும் என புத்தசாசன அமைச்சரைக் கோருகிறோம் என்றார்.
Post a Comment