பிள்ளைகளின் பசியை தீர்க்க, பலா மரத்தில் ஏறிய தந்தை பலி
பிள்ளைகளின் பசியை தீர்ப்பதற்காக பலா மரத்தில் ஏறிய தந்தையொருவர் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
பிள்ளைகள் பசியினால் வாடுவதால் அவர்களுக்கு இரவு உணவாக பலா சுளைகளை அவித்து கொடுக்கும் நோக்கில் பலா மரத்தில் ஏறிய போதே அதிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி, கெட்டபுலா தோட்டத்தைச் சேர்ந்த 37 வயதான எஸ்.பெரியப்பன் என்ற நபரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த குறித்த நபர் கடுமையான வறுமையில் வாடியவர் எனவும், பலாக்காய் ஒன்றை பறித்து அதனை அவித்து இரவு உணவாக்கிக் கொள்ளும் நோக்கில், 40 அடி உயரமான பலா மரத்தில் ஏறிய போது தவறி விழுந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்தவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடலின் உட்பாகங்களில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளது என கண்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எம்.சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
Post a Comment