'மஹிந்தவை தோற்கடிக்க செயற்பட்ட இனவாத குழு, மீண்டும் தலைதூக்கியுள்ளது'
இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்யும் எவராக இருந்தாலும் அவர்களை தராதரம் பாராது கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அரசாங்கம் பணிப்புரை வழங்கியுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதத்தில் நேற்று உரையாற்றிய மஹிந்த யாப்பா அபேவர்தன எம்.பி, இனவாத குழுக்கள் மீண்டும் குழப்பம் ஏற்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்டார்.
இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் மேலும் கூறியதாவது;- இனவாதத்தை தூண்ட முயற்சி செய்யும் சகலரையும் கைது செய்யுமாறு அரசாங்கம் பணிப்புரை வழங்கியது.
சட்டம் முறையாக செயற்படுத்தப்படவேண்டும்.இனவாதத்துடன் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்துமாறு அரசாங்கம் தெளிவாக பணித்துள்ளது.
கடந்த ஆட்சியில் போன்று மரத்தில் கட்டி வைக்கவோ, வெள்ளை வேனில் கடத்தவோ எமக்கு முடியாது. கடந்த அரசாங்க காலத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். யாராக இருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் யாரையும் பாதுகாக்க மாட்டோம் என்றார்.
முன்னதாக உரையாற்றிய மஹிந்த யாப்பா அபேவர்தன எம்.பி. மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க செயற்பட்ட இனவாத குழு மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நேற்று உரையாற்றிய ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்கள் பலரும் அண்மைக்காலமாக தலைதூக்கி வரும் இனவாத செயற்பாடுகளை தடுக்குமாறு கோரினார்.
Post a Comment