நினைவேந்தல் நிகழ்வு, இலங்கைக்கு சாபமாக அமைந்துள்ளது - விஜயதாச
யுத்த வெற்றி தினத்தை நாம் கொண்டாடி வரும் நிலையில் மறுபுறம் வடக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை இலங்கைக்கு சாபமாக அமைந்துள்ளது. அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்குமாயின் சுதந்திர தினத்தில் யுத்த வெற்றி தினத்தையும் கொண்டாட முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
யுத்தத்தை வெற்றி கொண்டதில் மஹிந்த, கோத்தாபாய ஆகியோரின் பங்களிப்புக்கும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்த வெற்றி தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டின் கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நடவடிக்கையில் முன்னைய அரசாங்கத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேற்கொண்ட நகர்வுகள் மிகவும் மதிக்கத்தக்க ஒன்றாகும். அதேபோல் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளையும் நாம் மதிக்க வேண்டும்.
அவர்களின் முயற்சி இல்லாது இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது. அதேபோல் யுத்த வெற்றி தினத்தை கொண்டாடும் போது நாம் அரசியல் பிரிவினை இல்லாது அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும்.
இந்த நிகழ்வில் பாகுபாடு இருக்கக் கூடாது. யுத்தத்தை வெற்றி கொண்டதில் அவர்களின் பங்களிப்பிற்கும் முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும். இராணுவ வெற்றி தினம் ஒருபுறம் நாம் கொண்டாடிய போதிலும் மறுபுறம் ஒரு இனம் தமது இன அழிப்பு தினமாக இதனை நினைவு கூர்ந்து வருகின்றது.
ஆகவே இவ்வாறான ஒரு மோசமான நிலைமையில் நாம் செயற்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கையின் சுதந்திர தினம் போன்ற ஒரு தினத்தில் பெப்ரவரி நான்காம் திகதியை இந்த தினமாகவும் இணைத்து எம்மால் கொண்டாட முடியுமாயின் அதுவே இன ஐக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமையும்.
ஆகவே அரசாங்கம் கொள்கை ரீதியில் ஒரு தீர்மானம் எடுக்குமாயின் அனைவரும் பொதுவான ஒரு தினத்தில் இராணுவ வெற்றி தினத்தையும் கொண்டாட முடியும். வடக்கில் பொதுமக்கள் தமது உறவுகளை நினைவு கூர எந்தத் தடையையும் நாம் விதிக்கவில்லை. இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் இறந்தனர்.
அவர்களை நினைவுகூருவது தவறில்லை. ஆனால் புலிகள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒரு ஆயுத அமைப்பாகும். அவர்களை நினைவுகூர அனுமதி இல்லை. அதையும் இவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். எனினும் அமைதியான வகையில் மக்கள் செயற்பட்டு வருவார்களாயின் அரசாங்கம் அவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படும்.
நாட்டின் இன ஐக்கியம், தேசிய ஒற்றுமை என்பதை பலப்படுத்த வேண்டும். அதில் அதிக அக்கறையுடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அதேபோல் இன ஐக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் நாம் மிகவும் விரைவான நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். அவ்வாறு இருக்கையில் ஒருசிலர் தொடர்ந்தும் இனவாதத்தை கையில் எடுத்துகொண்டு சில மோசமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். கருத்துக்கள் தெரிவிக்க சகலருக்கும் உரிமையுள்ளது.
ஆனால் முன்வைக்கும் கருத்துக்கள் மூலம் நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலும் குழப்பங்கள் ஏற்படக்கூடாது. நாட்டின் தேசிய ஒற்றுமையை பலப்படுத்தும் சகல நகர்வுகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முன்னெடுத்து செயற்படுவோம் என்றார்
ஞானசாரவை ஊக்கவிக்கும் உனக்கு நாட்டின் இன ஐக்கியம் பற்றிப் பேச என்ன அருகதையுண்டு?
ReplyDelete