Header Ads



ஞானசார தேரரே, உங்கள் துறவு உண்மைத் துறவல்ல..!

(வலம்புரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி)

துறவு என்ற சொற்பதத்தின் பொருள் பந்த பாசங்களைத் துறத்தல் என்பதாகும்.பந்த பாசங்களைத் துறப்பதற்கு ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களில் இருந்து விடுபட வேண்டும். இதுவே உண்மைத் துறவு.

உண்மையான துறவு நெறி நின்றவர்கள் பலர். அதில் கெளதம புத்தபிரான் முதன்மையானவர். எல்லாப்பற்றும் துறந்த அவர் துறவுக்கான ஓர் எடுத்துக்காட்டு எனலாம்.

உண்மையில் துறவு என்ற அறத்தில் உச்சமாக ஓங்கி நின்றவர்கள் சமணர்கள். எனினும் அவர்களின் துறவு மிகவும் கடுமையானது.

நடைமுறையில், யதார்த்தத்தில் சமணத் துறவைப் பின்பற்றுவது முடியாத காரியம் என்பதால்தான் பெளத்தம் தோன்றியது.

சமணத் துறவில் இருந்து சற்று நெகிழ்வுத் தன்மை கொண்டதாக பெளத்த துறவு அமைந்திருந்தது.

கெளதம புத்தபிரான் இந்த உலகுக்கு துறவின் மகிமையை எடுத்தியம்பினார்.புத்த பிக்குகளும் புத்த பிக்குணிகளுமாக இருபாலாருக்குரிய துறவை கெளதம புத்த பிரான் போதித்தார்.

பந்த பாசத்தை அறுத்து, மும்மலங்களை விடுத்து, ஞான நிலையில் நின்று, அன்பு மயப்பட்டு; அறத்தைக் காப்பாற்றுவதே துறவு என்பதாக அவரின் போதனைகள் இருந்தன.

எனினும் இங்கு இருக்கக்கூடிய பெளத்த பிக்குகளில் சிலர் துறவிகள் என்று சொல்ல முடியாத அளவில் வக்கிரம் பிடித்தவர்களாக வன்மம் நிறைந்தவர்களாக இருப்பதைக் காண முடிகின்றது.

காலத்துக்கு காலம் இத்தகையவர்கள் தலைதூக்கி நாட்டின் ஒற்றுமைக்கும் சமாதானத்துக்கும் பங்கம் செய்கின்றனர்.

இதில் இப்போது ஞானசார தேரர் துறவின் அடிப்படைகளைக் கைவிட்டு ஒரு பயங்கரவாதி போல தன்னைக் காட்டிக் கொள்கிறார்.

ஒரு பெளத்த துறவி இவ்வாறு செய்வதென்பது கெளதம புத்தபிரானின் போதனைகளை அடியோடு மீறுவதாகும்.

எனினும் இலங்கையில் பெளத்த பீடங்கள் தமது புத்த பிக்குகளுக்கு சில அடிப்படைத் தன்மைகளை போதித்து விடவில்லை என்றோ அல்லது புத்தபிரானின் போதனைக்கு எதிராகச் செயற்படும் புத்த பிக்குகள் அடிப்படைத் துறவுக் கோலத்தை துறக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையோ விதிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

அவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்குமாயின் ஞானசார தேரர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஞானசார தேரர் சிறுபான்மை இனத்துக்கு எதிராக அல்லது நாட்டின் அமைதிக்கு பாதகமாக கருத்துரைத்து வருகின்ற போதிலும் அவரைக் கைது செய்வதற்கு இலங்கையின் சட்டம் இடம்கொடுப்பதாக இல்லை.

ஞானசார தேரரைக் கைது செய்தாலும் பிரச்சினை, கைது செய்யாவிட்டாலும் பிரச்சினை என்ற இரண்டும் கெட்டான் நிலையில் அரசாங்கம் இருக்கும் போது,இந்த நாட்டில் இன ஒற்றுமை எங்ஙனம் சாத்தியமாக முடியும்? என்பது நியாயமான கேள்வியாக இருக்கும்.

எது எவ்வாறாயினும் என்னைக் கைது செய்வதை விடுத்து முதலில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளைக் கைது செய்யுங்கள் என்று ஞானசாரர் கூறுகிறார் எனில், அவர் துறக்க வேண்டியதைக் துறக்காமல் துறக்கக் கூடியதை துறந்து விட்டார் என்று சொல்வதே பொருத்தமுடையதாகும்.

2 comments:

  1. நீ வேறப்பா? இதையெல்லாம் அறியாதவன் செய்தால் கேட்டுத் திருந்துவான்!அவனே காசுக்காகவும் NGO க்களினது கைக்கூலியாகவும் இத செய்றான்.அவன்ட போயி இத சொல்லலாமா???

    ReplyDelete
  2. No more image please. We know who he is . Just name please.
    Thank you

    ReplyDelete

Powered by Blogger.