அச்சமூட்டும் குழுவுக்கு எதிராக அரசு, துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். - சம்பந்தன்
இனவாதத்தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளன.
சிறுபான்மையினருக்கு எதிராக தலைதூக்கியுள்ள அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.
இதன் போது உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்,
"இனம் எதுவாக இருந்தாலும், மதம் எதுவாக இருந்தாலும் சமாதானமாக வாழவே மக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில், சிறுபான்மை இனங்களை அச்சுறுத்தும் வகையில் குழுவொன்றுசெயற்பட்டு வருகின்றது. இவ்விதமான நிலைமைகள் தொடர்வதற்கு இடமளிக்கமுடியாது.
தனியார் சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன. தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டில் சமாதானமாக வாழமுடியுமா என்ற அச்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
கடந்தகால கசப்பான சம்பவங்கள் மீண்டும் தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது. எனவே, அனைவரும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, அச்சத்தை மூட்டும் வகையில் செயற்படும் குழுவுக்கு எதிராக அரசு துரித சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். கடமை உணர்வோடு அரசு இதைச் செய்யவேண்டும் என்றார்.
Post a Comment