அந்த பேயை கட்டிப் போடுங்கள்..!
-ராவய வார இறுதியின் ஆசிரியர் தலையங்கம், தமிழில்: ஆதில் அலி சப்ரி-
30 வருட யுத்தத்தின் பின்னர் 8 வருடங்களே கடந்துள்ளன. இந்த 8 வருட காலத்திலோ, எதிர்வரும் ஒரு தசாப்த காலத்திலோ 30 வருட யுத்தம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இன முரண்பாடுகளில் இருந்து இலங்கையில் மகிழ்ச்சியாக மீண்டு வர முடியுமான நிலையொன்றை காணமுடியாதுள்ளது.
அதேநேரம், இன்னொரு பேய் புதிய சுற்றொன்றில் பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஒரே நாட்டில் நூற்றுக்கு 12வீதமாக வசிக்கும் சகோதர தமிழ் மக்களுடன் நம்பிக்கையின்மை, சந்தேகத்தை உண்டாக்கிக்கொண்டதால் போதுமானளவு பாதிக்கப்பட்ட எமக்கு, மேலும் நூற்றுக்கு 10 வீதமான
சகோதர முஸ்லிம் மக்களுடனும் நம்பிக்கையின்மை, சந்தேகத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டுமென்றே முயற்சிக்கும் பேய் புதிய சுற்றொன்றில் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் புரட்சிக்கு வந்த, இந்த காவியுடையணிந்த பேய்க்கு ஆட்சியாளர்களின் போதியளவு அனுசரணையும், அங்கீகாரமும் கிடைத்தது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இந்த பேய்க்கு வெளிப்படையாகவே ஆதரவு வழங்கினார். இன் முகத்துடன் அவர்களுடன் உறவாடினர். அவர்களின் கல்விக் கல்லூரிகளின் ஆரம்ப வைபவங்களுக்கு அழைப்பு பெற்றுச் சென்றனர். அவர்களின் மூத்த சகோதர ஆட்சியாளன், இந்த பேய்களின் திட்டத்தின்படி அரங்கேற்றிய நாசகார செயல்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளாது பாதுகாத்தார். இறுதியாக, இந்த பலம் பெற்ற பேய் நாடளாவிய ரீதியில் சுதந்திரமாக நடமாடி பல பேரழிவுகளை ஏற்படுத்தியது. அழுத்கமையில் அது ஏற்றிய இனவாத தீயால் சகோதர முஸ்லிம்களின் உடைமைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை ஒரே இரவில் அழிந்துபோனது. எனினும், அந்த பேய்க்கெதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அந்த பேயின் செயற்பாடுகளால் நாட்டு முஸ்லிம்கள் போதியளவு பாதிக்கப்பட்டு, மனமுடைந்துள்ளனர். மரண பயத்தில் இரவு கண் விழித்து காலம் கடத்தவேண்டிய நிலை அவர்களுக்கு உருவாகியது. அந்த மரண பயத்தில் தொடர்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக முழுமையாக முன்னின்றனர். பொது வேற்பாளர் வெற்றிபெறுவதற்கு அதுவும் ஒரு காரணமாயிற்று. பேய் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு புதைகுளி வெட்டிக்கொடுத்தது.
முன்னரைப் போலவே, இன்று அதேபோன்றதொரு நிலைமையே உருவாகியுள்ளது. இன்றும் முஸ்லிம்கள் மரண பயத்தில் உள்ளனர். அவர்களின் வியாபாரஸ்தலங்கள், பள்ளிவாசல், வீடுகளை இனவாதிகள் எந்நேரத்தில் தாக்குவார்கள் என்ற பயத்தில் இருக்கின்றனர். இந்த பயத்துக்கு காரணமாக அமைவதும் அந்த ஒரே பேய்தான். இன்றும் அது சுதந்திரமாக உலாவருகின்றது. நல்லாட்சி அரசாங்கமொன்றை ஏற்படுத்திக்கொண்டதில் சகோதர முஸ்லிம் மக்கள் பயத்திலிருந்து சதந்திரமடைந்தனரா?
இனவாதம், மதவாதம், பாஸிஸவாதம் ஆகியவற்றைப் பரப்பிக்கொண்டு திரியும் பேய் சுதந்திரமாக அன்றி, சிறைச்சாலையொன்றிலேயே இருக்கவேண்டும். முஸ்லிம்களுக்கு போன்றே, அமைதியான
சிங்கள மக்களின் கூட்டங்கள், வணக்கஸ்தலங்களுக்கு அத்துமீறி, குழப்பங்களை விளைவித்து,
நீதிமன்று முன்னால் பல குற்றச்சாட்டுக்களின் குற்றவாளியாக உள்ளது. நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளதோடு, நீதிமன்றை தட்டிக்களித்து வருகிறது. அதன் பார்வையில், ஜனாதிபதியும் பிரதமரும் எதனையும் சொல்ல, செய்துகொள்ள முடியாதவர்களே. தான் சட்டத்திற்கும் நீதிமன்றுக்கும் கட்டுப்படேன். இவை அனைத்தையும் விட, சகோதர முஸ்லிம்களின் மதத் தலைவரை மிகக் கீழ்த்தரமாக தூற்றி, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தி, அடிப்படைவாதிகளை இணைத்துக்கொண்டு இடத்துக்கிடம் சென்றுகொண்டிருக்கிறது. நாடு இன்னுமோர் தடவை இனவாத, மதவாத சண்டையொன்றுக்கு முகங்கொடுத்துள்ளது. எனினும், சட்டமும், பொலிஸும் மௌனம். பிரார்த்தனைகளோடு வேலைகளை ஆரம்பிக்கும் பொலிஸ் மா அதிபர் சட்டத்தை வளைத்து தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களை நாலாபக்கமும் விரட்டி விரட்டியடிக்கும் பொலிஸார், இந்த பேய்க்கு முன்னால்
சிலைகளைப் போன்று ஊமையாகின்றனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் நல்லிணக்கம், சமாதானம் தொடர்பில் அதிகம் பேசுகின்றனர். இப்போது அது உண்மையானதா என்று பரிசோதித்து பார்க்கும் நேரம் வந்துள்ளது. சமாதானத்தை நிலைநாட்ட தேவையான பலத்தை பொலிஸாருக்கு கொடுத்துள்ளோம் என்று கூறி நாட்டின் தலைவர்கள் கையைத் தட்டிவிட்டு இருக்கமுடியாது. நாட்டில் இன, மத முரண்பாடுகள் ஏற்படாவண்ணம் அவர்களின் அரசியல் பலத்தைக் காட்டவேண்டும்.
Post a Comment