பாடசாலை பற்றி பேஸ்புக்கில் மோசமாக, எழுதியவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கல்வி கோட்டத்திலுள்ள ஏறாவூர் றகுமானிய்யா வித்தியாலயத்தின் அதிபரையும் பாடசாலையையும் சமூக வலைத்தளங்களில் மோசமாக எழுதி வந்த ஏழு பேருக்கு எதிராக அப் பாடசாலையின் அதிபர் எம்.பி.எம்.ஏ.சக்கூர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார்.
அடையாளம் காணப்பட்டுள்ள ஏழு பேருக்கு எதிராக இம் முறைப்பாட்டை செய்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக இப் பாடசாலையின் அதிபரையும் பாடசாலையையும் தரக்குறைவாக சிலர் சமூக வலைத்தளங்களில் எழுதி வந்த நிலையில் திங்கட்கிழமை பாடசாலையின் ஆசிரியர்கள் சுகவீன லீவு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
பாடசாலையின் கல்வி நடவடிக்கையை சீரழிக்கும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக எழுதுவதை கண்டித்தும் பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனும் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இங்குள்ள ஆசிரியர்கள் இந்த சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் இங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவர் வழங்கிய வாக்குறுதியினையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் பாடசாலைக்கு சமூகமளித்ததுடன் பாடசாலை வழமை நிலைக்கு திரும்பியதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
பாடசாலையின் அதிபர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment