குழந்தை வளர்ப்பு குழந்தைகளைக் கெடுக்கும் ''டெக்னாலஜி வில்லன்''
‘‘கேட்ஜெட் பயன்பாடு இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. இன்று கல்வி தொடர்பான பல நன்மைகளும் அதில் இருக்கின்றன. அதனால், கேட்ஜட்டுகளை முற்றிலுமாக நாம் வெறுக்க முடியாது. ஆனால், அதை அளவோடு பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.கேட்ஜட் பயன்பாட்டு நேரத்தை குழந்தைகள் 2 மணிநேரத்துக்கும் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த 2 மணி நேரத்திலும் உபயோகமான கல்வி மற்றும் தகவல்களைப் பெறுவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். பெற்றோரும் உடன் அமர்ந்து குழந்தைகளுடன் இணைந்துகொண்டால் இருவழி தொடர்பு ஏற்பட்டு அது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றவரிடம், கேட்ஜட்டுகளை அளவு தாண்டி பயன்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்கள் என்ன என்று கேட்டோம்...
‘‘பெரும்பாலான குழந்தைகள் இந்த சாதனங்களை உபயோகிக்கும்போது தங்களை அறியாமலே நொறுக்குத் தீனிகளை உண்கிறார்கள். அப்போது அவர்களின் கவனம் முழுவதும் சாதனங்களிலேயே இருப்பதால், உடல்ரீதியான செயல்பாடுகள் இல்லாமல் மிக சீக்கிரமே உடல்பருமன் வந்து மற்ற சிக்கல்களுக்கும் ஆளாகிறார்கள். இதேபோல தொடர்ந்து மொபைல்போன் போன்ற சாதனங்களை உபயோகிப்பதால் கையில் உள்ள நரம்பு, தசைகள், தசை நார்கள் பாதிக்கப்பட்டு Carpel tunnel syndrome எனும் பாதிப்பும் வரலாம். தொடர்ந்து கண்ணால், இந்த சாதனங்களை உற்று நோக்குவதால் வலிப்பு நோய் வரவும் வாய்ப்பு உள்ளது. இந்த சாதனங்களை உபயோகிக்கும் குழந்தைகள் மனித ஆற்றலுக்கும் மீறிய நிகழ்வுகளை காண்பதால் இயல்பான வாழ்க்கையில் உண்மைக்கும், கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாமல் போய் விடுகிறார்கள்.
உதாரணமாக, வாகன பந்தயங்கள் போன்ற நிகழ்வுகளை பார்த்துவிட்டு உண்மையில் அதுபோலவே வாகனம் ஓட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் இயல்பு வாழ்க்கையில் விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். நவீன சாதனங்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் சமூகம் சார்ந்த உறவுகள், விளையாட்டுகள் இல்லாமலும் ஆகிவிடுகிறது. அதிகம் தனிமையாகவே இருப்பதால் ஊருடன் ஒட்டி வாழும் இயல்பான குணமும் இன்றி ஆகிவிடுகிறார்கள்.
இதனால் ஒரு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நடந்தாலும் பிறருடன் சேர்ந்து அதை எதிர்கொள்ள தெரியாமல் திணறுகிறார்கள். இந்த குணம் அதிகமாக அதிகமாக மன அழுத்தம், மனசோர்வு போன்ற மனரீதியான பாதிப்புக்கும் ஆளாகிறார்கள். இதுபோல் நவீன தகவல் தொழில் நுட்ப சாதனங்களால் ஏற்படும் பக்க விளைவுகளை விவரித்தால் பட்டியல் நீண்டு கொண்டே போகும்’’ என்பவர் இதற்கான மாற்று வழிகள் என்ன என்பதையும் கூறுகிறார்.
‘‘நவீன சாதனங்களை குழந்தைகள் குறைக்க வேண்டும் என்றால் முதலில் பெற்றோர் குழந்தைகள் முன்பு அதிக நேரம் உபயோகித்துக் கொண்டிருக்கக்கூடாது. ஏனெனில், அவர்கள் பெற்றோர்களைப் பார்த்துதான் எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்கள். பெரியவர்களும் தேவைக்கு மட்டுமே அதை உபயோகித்து அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். குறிப்பாக, ஒன்றரை வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களைக் கொடுக்கக் கூடாது. அந்த காலகட்டத்தில் குழந்தையின் மண்டை ஓடு மிருதுவாக இருக்கும் என்பதால், எலக்ட்ரானிக் மின்காந்த அலைகள் மூளையைப் பாதிக்கும் அபாயம் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை’’ என்கிறார்.
Post a Comment