Header Ads



மோடியின் தைரியத்தில் ஆடும் ஞானசார, முஸ்லிம்கள் இயங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..!

-எஸ். ஹமீத்-

முஸ்லிம்களின் மீது உள்ளார்ந்த வன்மமும் குரோதமும் கொண்டியங்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி  புத்தர் ஜெயந்தி விழாவான வெசாக்கிற்கு  இலங்கை வந்து சென்ற மிகச் சில தினங்களிலேயே, இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமையானது பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. நேற்றும் இன்றுமான ஞான சார தேரரின் பேச்சுகளுக்கும் ,ஊடக மாநாட்டில் அவர் உமிழ்ந்த முஸ்லிம் விரோத நச்சுக் கருத்துக்களுக்கும் பின்னணியில் ஒரு புதிய சக்தி இருப்பதாகத் தோன்றுகிறது. அந்தப் புதிய சக்தி நரேந்திர மோடியோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

குஜராத் மற்றும் காஷ்மீர்  முஸ்லிம்களின் இரத்தக் கறை தனது உடம்பெல்லாம் படிந்த மோடியின் இலங்கை விஜயமானது பொது பல சேனா போன்ற இலங்கையிலுள்ள இனவாதக் கும்பலுக்குப் புதிய உத்வேகத்தையும் உணர்ச்சிகளையும் ஊட்டிவிட்டது போலவே தோன்றுகிறது.

நேற்றிரவு கோகிலவத்தைப் பள்ளிவாசல் தாக்குதல் நடந்த கையோடு இன்று நடந்த ஞானசாரவின் ஊடக மாநாடும் அதில் அவர் தெரிவித்துள்ள இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்குமெதிரான அகங்காரமான கருத்துக்களும், மற்றும் தற்போதைய  தோப்பூர் அசம்பாவிதங்களும் இலங்கையில் ஓர் இரத்த ஆற்றை ஓடச் செய்வதற்கான பெரும் முன்னெடுப்புகளோ என்ற ஐயத்தை நமக்குள் எழுப்புகின்றன.

எப்பொழுதுமே முஸ்லிம்களின் நலன்களின் மீதான அக்கறையைத் தவிர்த்தும் முஸ்லிம் விரோத இந்தியா, இஸ்ரேல், மியன்மாரின் நலன்களின் மீது அக்கறையைச் செலுத்தும் நமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்தான் மோடிக்கான அழைப்பை விடுத்தவர் என்பதோடு, மியன்மாரின் அதிபர் ஆங்  சாங் சூகியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியவர் என்பதனை ஓரமாகத் தூக்கிப் போடுவதற்கு இச்சந்தர்ப்பத்தில் முடியாமலுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டிய தருணம்  வந்துவிட்டது. கூடவே, எண்புறமும்  வேகத்தோடும் விவேகத்தோடும் விடாமுயற்சியோடும் இயங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அக்கிரமங்களை உடனுக்குடன் முஸ்லிம் நாடுகளுக்கும் இலங்கையிலுள்ள அதன் தூதுவர்களுக்கும் அறிவித்துக் கொண்டிருக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் சகோதரர்கள் தத்தம் நாடுகளிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதரகங்களிடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடமும் இங்கு நடப்பவை பற்றி உடனுக்குடன் அறிக்கை சமர்ப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்களின் எதிர்ப்பையும் கண்டனங்களையும் இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தச் செய்ய வேண்டும். இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பையும் அச்சமற்ற வாழ்க்கையையும் உறுதிப்படுத்துவதில் உலக மனிதாபிமான சக்திகள் பலவற்றையும் தேடிப் பிடித்து , அவைகளை இந்தப் பிரச்சினைக்குள் ஈர்க்க வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்....அல்லாஹ் என்றும் நம்முடன் இருக்கிறான் என்ற ஆணித்தரமான நம்பிக்கையை இறுகப் பற்றி நிற்போம்!

1 comment:

Powered by Blogger.