"பெற்றோர் கவனத்திற்கு" (பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு அருகில்)
உங்கள் பெண்குழந்தைகளை தனியார் வாகனங்களில் பாடசாலைக்கு அனுப்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் இந்த கட்டுரையை படியுங்கள்!
இன்று (24.05.2017) மதியம், பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பாதையோரமாக நான் நடந்துச் சென்றேன். ஒரு சிரிய பஸ்வண்டியினுள் 8 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அழுதுகொண்டிருப்பதை கண்டேன். அந்த பஸ் வண்டிக்குள் வேறு யாருமே இருக்கவில்லை. ஜன்னல் வழியாக “மகளே ஏன் அழுகிறாய்” என்று கேட்டேன்.
“வயிறு வழிக்கிறது அங்கிள், பஸ் அங்கிள் பால் பக்கட் வாங்கிகொடுத்தார், அதைகுடித்ததிலிருந்து வயிறு வலிக்கிறது” என்று அழத்தொடங்கினாள். கல்லூரிக்குள் அழைத்துச் செல்லலாம் என்று வகுப்பாசிரியரின் பெயரை கேட்டேன். இன்று ஆசிரியை பாடசாலைக்கு வரவில்லையென்று தேம்பித்தேம்பி அழுதுகொண்டே பதில்சொன்னாள்.
பெண் குழந்தை என்றபடியால் புங்குடுதீவு நித்தியாவின் நினைவே எனக்கு வந்தது. தனிமையாக அழுதுகொண்டிருக்கின்ற குழந்தைக்கு உதவாமல்போகவும் முடியவில்லை, உதவி செய்யபோய் வம்பில் சிக்கிக்கொள்ளவும் முடியவில்லை. அவளுடைய பெற்றோருக்கு போன் செய்து அவர்கள் அனுமதியை பெற்று உதவுவோம் என்றுபாா்த்தால் 8 வயது குழந்தைக்கு பெற்றோரின் தொலைபேசி இலக்கம் தெரியவில்லை.
மிகவும் சிரமப்பட்டு அந்த வாகன ஓட்டுனரை தேடிப்பிடித்து விஷயத்தை சொல்லி, அந்த நபரிடம் ஒப்படைத்தேன். ஆனால் எனது செயலில் எனக்குத் திருப்தியில்லை. நாட்டில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோக செய்திகளை அடிக்கடி படிப்பதால் அந்த குழந்தையின் பாதுகாப்பற்ற நிலைமையை குறித்து மிகவும் வேதனையோடு வீடு திரும்பினேன்.
இன்று பெரிய பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று பெருமை பேசுவதற்காகவே கடன்பட்டு அவர்களை பெரிய பாடசாலைகளில் சேர்த்துவிடுகிறார்கள் இன்றைய பெற்றோர். இதனால் சில குழந்தைகள் நாள்தோரும் பல மணித்தியாளங்களை பாதையிலேயே கழிக்கின்றனர். அவர்களுடைய குழந்தை பருவத்தையும் இழந்துவிடுகின்றனர்.
அன்புத் தாய்மார்களே! உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பாடசாலையைவிடவும் முக்கியமானது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். படித்து பட்டம் பெற்று, பெரும்பதவிகள் வகிப்பவர்கள் செய்யும் பெரிய தவறுகளுக்கு பின்னணியில் அவர்களுடைய சிறுவயதில் ஏற்பட்ட காயங்களும் காரணமாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
முடியுமானவரையில் வீட்டுக்கு அண்மையில் இருக்கும் பாடசாலைகளுக்கு அனுப்புங்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் தூரத்திலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பினால் நீங்களும் அவர்கள் பாதுகாப்பிற்காகச் செல்லுங்கள். அப்படியும் முடியாவிட்டால் உங்கள் தொலைப்பேச இலக்கங்களையாவது அவர்களுக்கு மனனம் செய்து கொடுங்கள். நாள் தோறும் நடந்த சம்பவங்களை அவர்களை அதட்டாமல் அவர்களிடமிருந்து பெற்றக்கொள்ளுங்கள். அவர்கள் ஒரு வாகனத்தில் போக விரும்பவில்லையென்றால் அவர்களை அடித்து அனுப்பாமல், அதற்கான உண்மை காரணம் என்ன என்று தேடிப்பார்த்து தகுந்த நடவடிக்கை எடுங்கள்.
நானும் என் மனைவியும் வீதி சிறுவர்கள் இல்லாத இலங்கையை காண பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கிறோம். சறுவயதில் துஷ்பிரயோகங்களுக்கும் மனக்காயங்களுக்கும் உள்ளான தலைவர்கள் நாட்டை ஆளும் வரையில் அதுகூடாத காரியம்! சீரான நாட்டு தலைவர்களை எதிர்காலத்தில் காணவேண்டுமானால் இன்றைய எங்கள் குழந்தைகளை மனக்காயங்கள் ஏற்படாத வகையில் வளர்ப்போம். இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்கள் என்று மேடைகளில் பீரங்கி பேச்சாளர்களாக இருந்தால் மட்டும் போதாது, அதற்கான ஆரம்ப படியை எங்கள் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம்.
மனக்காயங்கள் இல்லாத குழந்தைகளை பாதுகாக்க துடிக்கும் உங்களில் ஒருவன்
இஷாக் ஜுனைடீன்.
Very good advice.
ReplyDeletea valuable advice to all parents
ReplyDeleteParent should be alert about their children all time.
ReplyDelete