குனிகின்ற போது, அதிகமாக குட்டப்படுவோம்..!
கடந்த சில நாட்களாக இலங்கையில் மதத்தின் பேரால் காடையர்களின் அட்டூழியங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு விடியல்களிலும் எந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது எத்தனை கடைகள் எரிக்கப்பட்டுள்ளன என்கிற கவலைகளோடு விடிகின்றன .
நாடு தீப்பற்றி எரிகிற போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள நாட்டின் தலைவர்கள் ரோம் எரிகின்ற பொது பீடில் வாசித்த நீரோக்களை ஞாபகம் ஊட்டுகிறார்கள் .
இலங்கையின் சட்டம் ஒழுங்கு ஆகியன கேள்விக்குறிகளாக்கப்பட்டுள்ளன . சில பௌத்த துறவிகள் மடங்களை விட்டு மடை திறந்த வெள்ளங்களாக சமூகத்துக்குள் ஊடுருவி சமூக ஒற்றுமையை சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிற நிலையில் பொலிஸாரின் கையால் ஆகாத தனம் கவலை அளிக்கிறது . 21 முஸ்லீம் அரசியல் வாதிகள் நாட்டின் பல்வேறு பட்ட தரப்பினரை தொடர்பு கொண்டும் ஆகியது எதுவுமில்லை . ஜமியத்துல் உலமா குனூத் ஓதி பொறுமையை கடைப்பிடுக்குமாறு தொடர் அறிக்கைகள் விடுத்த வண்ணம் உள்ளது .
பொறுப்பது எதுவரை .... ?
நாம் முஸ்லிம்கள். அல்லாஹ்வை அசைக்க முடியாமல் நம்புகிறவர்கள் .மறு உலக வாழ்க்கையில் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க தினமும் பிரார்த்திப்பவர்கள் . இப்படி இருக்கையில் மரணத்தை வெறுப்பது எந்த வகையில் நியாயமானது? . மரணத்தை வெறுத்து துன்யாவை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் போது இப்படியான நெருக்கடிகள் காபிர்களிடம் இருந்து வரும் என்பது நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் முன்கூட்டி அறிவித்த எச்சரிக்கை .
எமது வீட்டுக்குள் திருடன் வருகின்ற போது வீட்டில் உள்ள பொருட்களை மனைவி மக்களை பாதுகாக்க முனைகிறோம் ; தற்பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் .அதன் போது மரணம் கூட ஏற்படலாம் அவ்வாறு மரணமே வருகின்ற போதும் இஸ்லாத்தின் பார்வையில் நாம் வெற்றியாளரே . ஆமாம், மிகபெரிய ஸ்தானமான ஷஹீதாக மரணிக்கும் பாக்கியம் கிடைக்கிறது .
இதே போலத்தான் எமது பள்ளிவாசல்களும் வியாபார நிலையங்களும் அந்நியர்களால் தாக்கப்படும் போது சூறையாடப்படும் போது அளவுக்கு அதிகமான பொறுமை காப்பது நம் மீதே நாம் மண்ணை வாரிக்கொட்டுவது போன்றதாகும் . இலங்கை முஸ்லிம்களின் பலம் அவர்களின் பொருளாதரம் என்பது எதிரிகள் போட்டுள்ள தப்புக்கணக்கு . ஓரு வகையில அவர்களின் கருத்து நியாயப்படுத்தப்பட்டாலும் முஸ்லீமகளின் பலம் உள்ளத்தில் உள்ள ஈமானில் உள்ளது . அந்த பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பட்சத்த்தில் முஸ்லிம்களின் பலத்தை நிர்மூலமாக்க முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு .அதனால்தான் வியாபர நிலையங்கள் , கடைகள் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுகின்றன .
இவ்வாறு நமது உடைமைகள் அந்நியர்களால் தாக்கப்படுகிற போது அல்லாஹ் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள எந்த முஸ்லிமுக்கும் பொறுமை என்பது ஓரு வரம்பு வரைதான் இருக்கும். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்து நோக்கினால் கூட பிற இனங்களோடு கலவரங்கள் ,நெருக்கடிகள் ஏற்பட்ட போது முஸ்லிம்கள் துணிவாக நின்ற சமயங்களில் கலவரங்களை அடுத்து நீண்ட அமைதியும் அடங்கிப்போன சமயங்களில் அடிக்கடி தொந்தரவுகளையும் எதிர்நோக்கியுள்ளதை அவதானிக்க முடியும் .
கிறிஸ் பூதங்கள் இலங்கை முழுவதும் உள்ள முஸ்லீம்களை அச்சப்படுத்திக்கொண்டு இருந்த நிலையில் புத்தளத்தில் முஸ்லிம்களின் துணிச்சலான சம்பவத்தை அடுத்து அது முடிவுக்கு வந்தது . ஆக பொறுமை என்கிற பேரில் அதிகம் குனிகின்ற போது அதிகமாக குட்டப்படுவோம் .தலை நிமிர்ந்து நிற்கிற போது குட்டுவதற்கு கைகள் எட்ட இடம் அளிக்கப்படப்போவதில்லை .
சொந்த உடைமைகள் சூறையாடப்படுகிற போது இஸ்லாத்தின் பார்வையில் பொறுமையை கடைப்பிடிப்பது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது .அதற்காக சிறுபாண்மையினராக வாழும் நமது நாட்டில் யுத்தம் புரிய வேண்டும் என்று நான் கூற வரவில்லை . பள்ளிவாசல்கள் முஸ்லீம் வீடுகள் முஸ்லீம் வியாபார தளங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் தற்பாதுகாப்பு நடவடிக்கைகைகளில் ஈடுபடுவது காலத்தின் அவசியமாகிறது
என்னதான் செய்ய முடியும் ?
உடமைகள் தாக்கப்படுவதை தடுக்க ஒவ்வொரு பள்ளிகளில் உள்ள நிர்வாகங்களும் கூடி ஒவ்வொரு பள்ளிகளையும் மற்றும் அங்குள்ள முஸ்லீம் வீடுகள் வியாபார தளங்களையும் பாதுகாக்க இளைஞர் அமைப்புகளை உருவாக்க வேண்டும் . புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்த போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் உருவாக்கப்பட்ட ஊர்காவல் படை போன்ற மாதிரியை இதற்காக எடுத்துக்கொள்ள முடியும் . இது தற்காலிக ரீதியில் உருவாக்கப்பட்டது என்பதை உள்ளூர் பொலிஸாருக்கு உறுதிப்படுத்த வேண்டும் . ஒவ்வொரு இரவுகளிலும் இளைஞர் குழுக்கள்
மாறி மாறி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் .இவர்களுக்கு நிதி உதவிகளை அந்தந்த பள்ளிகளை சுற்றியுள்ள முஸ்லீம் வியாபார தளங்களின் உரிமையாளர்களிடம் பெற்று வழங்க பள்ளி நிர்வாகங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் .
இன்ஷா அல்லாஹ் இவ்வாறான நிலையை நாம் ஏற்படுத்துகிற போது நிலைமைகளில் முன்னேற்றத்தை காணமுடியும் .எல்லாம் வல்ல அல்லாஹு த ஆலாவிடம் நாட்டில் சமாதானமும் இன ஒற்றுமையும் ஏற்பட பிரார்த்தனை புரிவோம்.
-முஹம்மது ராஜி
Post a Comment