சிறிலங்காவுக்கு 44 பில்லியன் ரூபா, உதவியை வழங்க சீன உறுதி
சிறிலங்காவுக்கு 2 பில்லியன் யுவான் (44 பில்லியன் ரூபா) உதவியை வழங்குவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று உறுதி அளித்துள்ளார். சீன அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் பீஜிங்கில் நேற்று நடந்த இருதரப்பு பேச்சுக்களின் போதே இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இந்த ஆண்டு அபிவிருத்தித் திட்டங்களுக்காக சீனா 400 மில்லியன் யுவான்களை வழங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக, 2018- 2020 காலப்பகுதியில் 2 பில்லியன் யுவான்களை சிறிலங்காவுக்கு வழங்குவதாக சீன அதிபர் உறுதியளித்தார்.
அத்துடன், சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா முழு ஆதரவை வழங்கும் என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் .இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் சீன அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் போது சிறிலங்காவின் அபிவிருத்திக்கு சீனா வழங்கி வரும் உதவிகளுக்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தெற்காசியாவின் கடல்சார் கேந்திரமாக உருவெடுக்கும் சிறிலங்காவின் எதிர்பார்ப்புக்கு சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டம் நிச்சயம் உதவியாக இருக்கும் என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
Post a Comment