ஊசி மூலமாக வெளிநாட்டவர், நோய் பரப்புவதாக வதந்தி - 3 வெளிநாட்டினர் மீது தாக்குதல்
மலையக பிரதேசங்களில் ஊசி மருந்துகள் மூலமாக தொற்று நோய்களை வெளிநாட்டவர்கள் பரவ செய்கின்றனர் என்ற வதந்தி சில மாதங்களாக பரவுகிறது.
இந்நிலையில் ஹப்புத்தளை, பிட்ரத்மலை பகுதியில் ஊசி மருந்து ஏற்ற வந்தார்கள் என்ற சந்தேகத்தில் சைக்கிளில் பயணித்த மூன்று வெளிநாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றள்ளது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹப்புத்தளை, பிட்ரத்மலை பகுதியில் தேவாலயம் ஒன்றில் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அப்பகுதி ஊடாக வெளிநாட்டு பிரஜைகள் மூவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவர்களில் ஒருவர் தனது சைக்கிள் டயர்களுக்கு காற்று நிரப்பும் உபகரணங்களை தனது பையில் இருந்து எடுத்துள்ளார்.
இதனால் சந்தேகம் கொண்ட பிரதேசவாசிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்க அவர்களும் எதிர்த்து பதில் கூற பிரதேசத்தில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. உடனேயே வெளிநாட்டு பிரஜைகள் மூவரும் குறித்த இடத்திலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
இருந்தும் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பிரதேசவாசிகள் அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இங்கிலாந்து நாட்டு வீரர் ஒருவரையும் நேபாள நாட்டு வீரர் ஒருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற் கொள்வதுடன் பிரதேசவாசிகள் தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்கள் மூவரும் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பிட்ரத்மலை தோட்டத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்கள் விசாரணைக்காக பொலிஸார் ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஹப்புத்தளை, பண்டாரவளை, தியதலாவை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் கூட்டாகச் சேர்ந்து மேற்படி சம்பவம் தொடர்பாக விசேட விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை எதிர்வரும் தினங்களில் கைது செய்து பாதிப்படைந்தவர்களுக்கு உரிய தீர்வை பெற்றுகொடுப்பதுடன் வெளிநாட்டு பிரஜைகளின் காணாமல் போன சைக்கிள் மற்றும் பெறுமதியான உபகரணங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இச்சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினர் தெரிவித்தனர்.
Post a Comment